29-09-2008 அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தபின் மாலை 4.30 மணிக்கு அனைவரும் பயணியர் விடுதிக்கு திரும்பினோம். இன்று இரவு இங்கு தங்கப்போவதால் பயணிகள் கடைகளுக்கு சென்று வர அனுமதிக்கப்பட்டனர். அவரவருக்கு பிடித்த பொருட்களை வாங்குவதற்காக அனைவரும் வெளியில் சென்றுவிட்டனர்.
பெரும்பாலான கடைகளில் குளிர்கால ஆடைகள் கிடைக்கின்றன. முக்கியமாக அனைத்து கடைகளிலும் ஆல்கஹால் மற்றும் பீர் வகைகள் கிடைக்கின்றன. நானும் எதையாவது வாங்களாம் என்று பல கடைகளுக்கு சென்றேன். எதையும் வாங்குவதற்கு பிடிக்காததால் ஒரு புத்தக கடைக்கு சென்றேன். அங்கு learn Japanese என்ற புத்தகம் காணக்கிடைத்தது. எதற்கும் பயன்படுமென்று வங்கிக்கொண்டு வந்தேன்.
இங்கு மலை ஏறுவதற்கு பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மூலிகை மசாஜ் செய்துகொள்ள அவர்கள் ஆர்வமுடன் செல்கிறார்கள்.எனக்கு கழுத்தில் சுளுக்கு இருந்ததால் நானும் சென்றேன். ஆனால் நேரமின்மையால் அங்கு செல்லமுடியாமல் போனது.
இரவு 7 மணிக்கு வெளியில் சென்று திரும்பும் போது மழை ஆரம்பித்தது. மழை நிற்கவே இல்லை. ஆதலால் குடைவாங்கி கொண்டாவது ஹோட்டலுக்கு திரும்பலாமென்று விலை கேட்டால் 180 ரூபாய் என்று சொன்னார்கள். சென்னையில் அதே குடை 80 ரூபாய்கு கிடைக்கும். இரவு உணவுக்குப்பின் அனைவரும் உறங்கச் சென்றோம்.
29-09-2008: முதலில் குப்தேஸ்வர் குகைக்குச் சென்றோம். நுழைவு கட்டணமாக சில ரூபய்களை வசூல் செய்கிறார்கள். நுழைவு சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால், செயற்கையான வடிவமைப்புடன் கூடிய சிவன் மற்றும் பசுவின் சிலைகள் காணக்கிடைக்கின்றன. உள்ளே சென்று வெளியில் வரும் வழியில் ஒரு பாதாள வழி இருந்தது. அதன் உள்ளே சென்று வர ஒருவருக்கு 80 ரூபாய் என்றார்கள். ஏதோ பார்க்களாம் என்று நானும் வினோத்தும் செல்ல நினைத்தோம். எங்களுடன் வந்த தமிழும், வினோத்தின் அம்மாவும் இணைந்துகொண்டார்கள்.
செல்லும் வழி மிகவும் குறுகளாக இருந்தது. வினோத்தின் அம்மாவும் உடன் வந்ததால் பயமாக இருந்தது. செல்லும் வழி இருட்டாக இருந்தது, ஆங்காங்கே சில மின் விளக்குகள் எரிகின்றது. முடிவில் மலையின் மேலிருந்து வேகமாக அருவி வந்து விழுகிறது. விழுந்த அருவி எங்கு சென்று மறைகிறது என்று தெரியவில்லை.
முதலிலேயே குப்தா குகைக்கு வந்ததால் அருவி எங்கிருந்து வருகிறது என்பதும் புரியாமல் இருந்தது. பிறகு தேவின் அருவி சென்ற பிறகுதான், அருவியானது தேவின் அருவியிலிருந்து வேகமாக விழுந்து மலைகளை குடைந்து குப்தா கோவிலின் பாதாள குகைக்குள் சென்று மறைவது புரிந்தது. பாதாள குகையிலிருந்து அருவி விழுவதைப் பார்ப்பதற்கு மின்னல் வெட்டுவதைப் போல் இருந்தது.
தேவின் அருவியும் அதன் தொடர்ச்சியான குப்தா குகையும் நேபாளில் பார்த்து ரசிக்கவேண்டிய முக்கியமான இடமாகும். முக்கியமாக இளம் ஜோடிகளை இது வெகுவாக கவர்கிறது.
இங்கிருந்து திரும்ப மனமில்லாமல் அனைவரும் விடுதிக்கு வந்து உடைமைகளை எடுத்திக்கொண்டு மனக்கமானாவை நோக்கி பயணம் செய்தோம்.