
நான் சற்றே அறையை விட்டு வெளியில் வந்து என்னுடைய குழுவினர் எதிர்படுகிறார்களா என்று நோட்டம்விட்டேன். பள்ளிச் சிறுவர்களில் சிலர் தூக்கக் கலக்கத்துடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பெரிய வகுப்பு மாணவர்கள் சிறிய வகுப்பு மாணவர்களை தாதாக்களைப் போல் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்கள். ஒரு அறையின் முன்பு சில மாணவர்களும், ஆசிரியர்களும் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். எவ்வளவு தட்டியும் உள்ளிருந்து யாருமே கதவைத் திறக்கவில்லை. நீண்ட முயற்சிக்குப் பின்பு இரண்டாவது படிக்கும் நான்கு மாணவர்கள் கண்களைக் கசக்கிக் கொண்டு கதவைத் திறந்தார்கள்.
"இவங்கள யாருடீ தனியாவிட்டது" -ன்னு ஒரு ஆசிரியை சக ஊழியரிடம் குறை பட்டுக் கொண்டார்.
நான் அவர்களுக்கு புன்னகை செய்துவிட்டு அறைக்குத் திரும்பி உடைமைகளை தயார் செய்வதில் துரிதமானேன். சிறிது நேரத்தில் டூர் மேனேஜர் எல்லோருடைய அறை வாசல்களிலும் வந்து தயாராக இருக்கும் படி சொல்லிவிட்டுச்சென்றார்.
காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து இந்தியாவிலுள்ள ரஸ்கலுக்குப் புறப்பட தயாரானோம். எனக்கு காத்மண்டு சென்னையைப் போல் தான் தோன்றியது. வெயில் கூட சற்று அதிகம் என்றே சொல்லுவேன்.
எங்கள் விடுதியை விட்டு பத்து நிமிடப் பயணம் செய்திருந்தோம். சென்னையில் உள்ளது போல் வாகன நெரிசலை சந்திக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே மலையில் செல்லும் பயணம் வாகன வேகத்தை மட்டுப்படுத்தியிருந்தது. இதில் வாகன நெரிசல் வேறு எரிச்சல் படுத்தியது.
வண்டி மிகவும் குறைவான வேகத்தில் சென்றதால் நாங்கள் வண்டியை விட்டு கீழிறங்கி நடந்து சென்றோம். வண்டியில் உள்ள பெரியவர்கள் எங்களைக் கோபிக்கவே நாங்கள் மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம்.
ஒரு இடத்தில் வண்டிகள் நின்று நின்று சென்றுகொண்டிருந்தன. இரு சக்கர வாகனத்தில் சென்ற புதிதாக மணமுடித்த தம்பதிகள் லாரி மோதி இறந்திருந்தார்கள். அந்த விபத்து நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது. அதனால் தான் வழி நெடுகவும் வாகன நெரிசலை சந்திக்க நேர்ந்தது. ஐயோ... இது தெரியாமல் குறைபட்டுக் கொண்டோமே என்று வருத்தமாக இருந்தது.
அதற்கு மேல் வண்டி வேகம் எடுத்தது. மதியம் எதோ ஒரு ஊரில் நிறுத்தினார்கள். அங்கு காஞ்சி மடம் பஜனைக்கான மண்டபம் கட்டிக் கொடுத்திருந்தார்கள். திருவிழா சமயம் என்பதால் கூட்டம் வேறு நடந்துகொண்டிருந்தது. தண்ணீர் வசதியெல்லாம் கூட இருந்தது. சரி இங்கேயே போஜனம் முடித்துப் புறப்படலாம் என்றால் அவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.
சாலைக்குப் பக்கத்திலிருந்த குட்டிச்சுவரில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கிளம்பினோம். சில மணிநேரம் பயணம் செய்து இந்திய எல்லையை அடைந்தோம். பார்க்குமிடமெல்லாம் ஏழ்மை தாண்டவமாடுகிறது. சாலையோரங்களில் பெயரளவிற்குக் கூட சுத்தம் இல்லை. இன்னும் கூட அவர்களின் வாழ்கைத் தரம் உயரவில்லை.
வழிநெடுக இது போன்ற காட்சிகளையே பார்த்துக் கொண்டு நாங்கள் தங்க வேண்டிய பயணியர் விடுதிக்கு இரவு 8 மணிக்குச் சென்றோம். பிறகு சமைத்து எங்களுக்கு இரவு சமையல் படைத்தார்கள். எங்கள் யாருக்குமே தங்கும் விடுதி பிடிக்கவில்லை.
நாங்கள் தங்கிய அறையில் ஒரு வெளிநாட்டவரும் தங்கியிருந்தார். அவர் எங்களுக்கு முன்பே அங்கு தங்கியிருந்தார். எங்களுடன் வந்த குட்டிக் குழந்தை காவ்யாவின் பாட்டி சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். வெளிநாட்டவருக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எங்களிடம் வந்து சத்தம் போடாமல் பேசுங்கள் நான் நாளை காலை சீக்கிரம் புறப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். தவறாக நினைத்த பாட்டி அவரை சண்டைக்கு இழுத்தார்கள். அவரும் ஏதேதோ திட்டினார். இருவருக்குமிடையே வாக்கு வாதம் முற்றியது.
வினோத்தின் அம்மா தலையிட்டு "வெளிநாட்டவர் நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்" என்று பாட்டியை சமாதானப்படுத்தினார். காலையில் புத்த காயாவிற்குப் புறப்பட வேண்டுமென்பதால் அனைவரும் உறங்கச்சென்றோம்.