
மறுபடியும் படித்துறைக்கு ஓடினேன். சரியாக நான் அங்கு செல்லவும் நிகழ்ச்சி முடியவும் சரியாக இருந்தது. வழியில் எதிர்பட்ட ஒருவனிடம் பேச்சுக் கொடுத்தேன். அவனது பெயர் ராகவன் என்று சொன்னான். இந்திய ஆணுக்கும், நேபாளி பெண்ணுக்கும் பிறந்தவன் என்று சொல்லிக்கொண்டான். MSC Physics final year படித்துக்கொண்டு இருந்ததாகச் சொன்னான். அவனுடைய தம்பியும் உடனிருந்தான். 12th படிக்கிறானாம்.
மேலும் என்னைப் பற்றி விசாரித்தான். நான் கடந்து வந்த பாதையையும், இனி செல்ல இருக்கும் இடங்களையும் பற்றி விவரித்தேன். பெயர் என்னவென்று கேட்டான். என் பெயர் கிருஷ்ண பிரபு, நண்பர்கள் கிச்சா என்று கூப்பிடுவார்கள் என்று சொன்னேன். What kitcha? You know one thing, the word Kitcha's meaning is dog in Nepali language.... என்று சொன்னான். ஆஹா! ஊரு விட்டு ஊரு வந்தது இதுக்குத்தானா? என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
மன்னராச்சி விலகி ஜனநாயக ஆட்சி வருவதைப் பற்றி வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தான். பனி பொழிந்தாலும், சுற்றி தகனம் நடந்ததால் சற்று குளிர் காய முடிந்தது.
எவ்வளவு நல்ல கலாச்சாரம். எங்களூரில் இதுபோல் கோவிலின் படித்துறையில் தகனம் செய்ய இயலாது என தென்னிந்திய கலாச்சாரத்தைப் பற்றி கூறினேன். எங்கிருந்து எங்கு வந்து இதையெல்லாம் ரசிக்கிறீர்கள்!. இங்கிருப்பவர்களுக்கு இதனுடைய மகிமை தெரிவதில்லை என குறை பட்டுக்கொண்டான்.
எங்களுடைய சம்பாஷனை முடிந்ததும் புறப்படத் தயாரானேன். திரும்பும் வழி இருட்டாக இருந்ததால் திசை தெரியாமல் முழித்தேன். என்னுடைய ஹோட்டலுக்கு எப்படி போக வேண்டுமென்று கேட்டேன். அந்த வழியில் தான் நாங்களும் போக வேண்டும் கூட வாருங்கள் என்று என்னையும் அழைத்துக் கொண்டான். விடுதி நெருங்கியதும் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.
நீண்ட நேரம் அவர்களுடைய கலாச்சாரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தேன். எல்லா இடங்களிலும் மேற்கத்திய கலாச்சாரம் தான் சிறந்தது என்ற மாயை எப்படித்தான் நுழைந்ததோ தெரியவில்லை!... அப்படி நுழைந்த இடங்களில் காத்மாண்டுவும் ஒன்று. இந்தி நடிகர், நடிகைகளுக்கு நேபாளி மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல இடங்களில் இந்திப் பட பாடல்கள் ரம்யமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
விடுதிக்குத் திரும்பினால் சென்னை, மயிலாப்பூரிலுள்ள ஒரு பள்ளியிலிருந்து சுமார் 50 மாணவர்கள் எங்களுடைய விடுதியில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டு இருந்தார்கள். பள்ளிச் சுற்றுலாவிற்கு வந்துள்ளார்களாம். காத்மண்டில் இரவு தங்கி அங்கிருந்து போக்ரா, கேங்டாக் என சில இடங்களுக்கும் செல்ல இருப்பதாக கூறினார்கள். என்னுடைய எவரஸ்ட் பயண வீடியோவை அவர்களுக்கு காட்டினேன். மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.
மறுநாள் காத்மண்டுவை விட்டு இந்தியாவிற்கு வர வேண்டும். எனவே வாங்கிய பொருட்கள் அனைத்தையும் பார்சல் செய்து பைகளில் வைத்தோம். அனைத்தையும் சரி பார்த்த பிறகு, இரவு உணவு முடித்துக் கொண்டு உறங்கச் சென்றோம்.
பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
2 comments:
//சுற்றுளா //
இல்லை. சுற்றுலா.
நகைச்சுவையாக present செய்ய முயலுங்கள். அதன் மதிப்பே தனி.
நன்றி சாய்தாசன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நகைச்சுவையாக எழுத முயற்சி செய்கிறேன்.
மேலும் பிழைகளை திருத்தி ஊக்கப்படுத்தினால் மகிழ்வேன். இனிவரும் பதிவுகளில் சுற்றுலா என்றே எழுதுகிறேன்.
தலைப்பில் உள்ள பிழையை மட்டும் திருத்திவிட்டேன்.
நன்றிகளுடன்,
கிருஷ்ண பிரபு
Post a Comment