
நாங்கள் பயணம் செல்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்ததால் அற்றில் அதிகப்படியான நீர்வரத்து இருந்தது. உடன் பயணம் செய்த பலரும் ஆனந்தமாக நீராடினார்கள்.
வேத நூல்களில் கூட இதன் பெயர் சில இடங்களில் வருகிறதாம். இந்த நதிதான் எத்தனை ரகசியங்களை தன்னுள்ளே வைத்துக் கொண்டு நீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காலத்துடன் சுழல்கிறது. தசரத மகாராஜா இங்குதான் ஒரு பாவத்தை தன்னையும் அறியாமல் செய்ததாக சிறுவயதில் படித்தது ஞாபகத்திற்கு வருகிறது.
ஷர்வன்(சரவண)குமார் என்ற சிறுவன் தனது பார்வையற்ற பெற்றோருக்கு தண்ணீர் கொண்டு வர சரயு நதிக்கு சென்று குவளையில் நீர் எடுக்கும் போது, வேட்டையாட வந்த மகாராஜா குவளையில் நீர் சேரும் சப்தத்தை தவறாக நினைத்து அம்பெய்து அவனைக் கொன்றானாம். சாகும் நிலையில் இருந்த அவன் தனது பெற்றோருக்கு நீர் கொண்டு செல்லுமாறு மகாராஜாவிடம் தயக்கத்துடன் உதவி கேட்டானாம்.
மகனின் வருகைக்காகக் காத்திருந்த பெற்றோரிடம் நடந்ததை எடுத்துக் கூறிய தசரதன் அவர்களிடமிருந்து சாபம் பெற்றதாகவும், அதனால் ராமன் வனவாசம் சென்றதாகவும், அந்த பிரிவு தாளாமல் தசரதன் மாண்டதாகவும் கதை விறியும்.
அது மட்டுமின்றி விஷ்ணுவின் 7 வது அவதாரமான ராமன் சரயு நதியில் இறங்கி ஜலமோக்ஷம் அடைந்ததாக புராணம் செல்கிறது. எனவே இங்கு பலரும் பக்தியுடன் நீராடுகிறார்கள்.
சில வடஇந்தியர்கள் சுமங்களி பூஜையை இந்த சரயு நதிக்கரையில் செய்கிறார்கள். கரையை ஒட்டிய கடைகளில் பூஜைக்கு தேவையான பொருட்கள் கிடைக்கின்றன.
சரயு நதிக்கரையில் தான் தசரத மகாராஜா தினமும் குளிப்பாராம். இந்த நதிக் கரையில் தான் லக்ஷ்மண் கட்(மயாணம்) இருக்கிறதாம். எது இருக்கிறதோ இல்லையோ அயோத்தி எங்கும் திருப்பும் திசை யாவும் ஆஞ்சனேயர்(குரங்குகள்) இருக்கிறார்.
பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
No comments:
Post a Comment