Friday, May 8, 2009

Razcal to Gaya journey

03-10-2008: இன்றுதான் என் வாழ்வில் இரண்டாவது நாளாக நீண்ட நாள் பஸ் பயணம் அமையப் போகிறது என்று ரஸ்கலில் காலை பயணத்தைத் தொடங்கியபோது எனக்குத் தெரியாது. காலை 9 மணிக்குத் தொடங்கிய பஸ் பயணம் இரவு 7.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதில் ஆங்காங்கு பேருந்தை நிறுத்தி சிறுநீர் கழித்து, தேநீர் பருகி, மதிய உணவை சாப்பிட்டதோடு சரி. உருப்படியாக வேறு எதையும் செய்யவில்லை. பீஹாரின் தலைநகர் பாட்னாவை நெருங்கும் போதே வானம் இருட்டத் தொடங்கிவிட்டது. அங்கிருந்து கயாவிற்கு செல்வதற்குள் அந்திவானம் சாய்ந்து இருட்டிவிட்டது. ஆகவே குளித்து முடித்து காலையில் எழுந்து கயாவிற்குச் செல்ல வேண்டி உறங்கச்சென்றோம்.

காலை எழுந்து செல்ல வேண்டிய கயாவிற்கு ஒரு பெரிய கதையே இருக்கிறது.

முன்பொரு காலத்தில் அசுர குலத்தில் பிறந்த கயாசுரன் என்பவன் கடும் தவம் புரிந்தான். அவனுடைய கடும் தவத்தைக் கண்டு தேவர் குலமே நடுங்கியது. ராவணன் போல, ஹிரனிய காசிபன் போல ஒருவன் உதித்துவிட்டான் என அலறினார்கள். ஆகவே பிரம்மாவிடம் சென்று முறையிட்டார்கள்.

கயாசுரனால் ஒரு தீங்கும் நேராது. ஆகவே பயப்படாதீர்கள் என்று சொல்லிப் பார்த்தார் பிரம்மா. அதை அவர்கள் கேட்காததால் அவர்களை சிவபெருமானிடம் அழைத்துச் சென்றார்.

சிவபெருமானோ "என்னுடைய வேலையும் அவர்களுடைய வேலையும் ஒன்று. அதாவது அழித்தல், ஆகவே நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை" என்றார். அதனால் காக்கும் கடவுளான விஷ்ணுவைப் பாருங்கள் என்று கூறினார். தேவர்கள் சிவபெருமானையும் அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றனர்.

அனைத்தையும் கேட்ட விஷ்ணு கயாசுரனை அணுகி "என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றார்.

"தேவர்கள், ரிஷிகள், மந்திரங்கள், துறவிகள் இவர்களைக் காட்டிலும் எனது உடல் புனிதமாகவேண்டும். என்னைத் தொடுபவர்களுக்கும் புனிதம் ஏற்பட வேண்டும்" என்று வரம் கேட்டான்.

அடடா... இவ்வளவுதானா! என்று தேவர்கள் சுதாரித்தனர்.

கயாசுரனின் வரம் ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. தீங்கு செந்த அனைவரும் அவனிடம் சென்று புனிதமானதால் சொர்க்கத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. நரகமே சூன்யமானது. யமதர்மனின் நாற்காலி ஆட்டம் கண்டது.

"நரகத்தைக் கலைத்துவிடலாம். ஆனால் அப்படி ஒரு இடம் இருப்பதால் தானே தீங்கு செய்ய மக்கள் பயப்படுகின்றனர். கயாசுரனின் வரத்தால் மக்கள் அனைவரும் பயமின்றி தீங்கு செய்துவிட்டு அவனிடம் சென்று புனிதமாகின்றனர். எனவே நல்லவர்கள் கூட வழிமாறிவிடுகின்றனர். இது சகிக்க முடியாததாக இருக்கின்றது. இதற்காக ஏதாவது செய்யவேண்டும்" என்று பிரம்மாவிடம் சென்று முறையிட்டான்.

பிரம்மா, யமனை அழைத்துக் கொண்டு வரமளித்த விஷ்ணுவிடம் சென்றார்.

விஷ்ணு இதற்கு ஒரு வழி கண்டுபிடித்து கயாசுரனிடம் சென்றார். ஒரு புனித யாகம் நடத்த இருக்கிறேன். அதற்கு உன்னுடைய உதவி வேண்டும் என்று கூறினார்.

"என்ன வேண்டுமென ஆணையிடுங்கள்" என்று கயாசுரன் பக்தியுடன் கூறினான்.

"யாகம் செய்ய உன்னுடைய உடலை தானமாகக் கொடு" என்று விஷ்ணு கூறினார்.

ஒரு நல்ல காரியத்திற்கு என்னுடைய உடல் பயன்படுமெனில் அதைவிட வேறு மகிழ்ச்சி இல்லை என்று தன்னுடைய உடலைத் தரையில் கிடத்தினான் கயாசுரன். அவன் அப்படி தரையில் படுத்த இடம் மகத நாட்டைச் சேர்ந்த சம்பா காரன்யம் என்ற இடம். அந்த அழகிய பர்வதத்தில் நடந்த யாகத்தில் கோடானு கோடி தேவர்களும் கலந்து கொண்டார்கள்.

யாகம் தொடங்கியது, ஆனால் அவனுடைய உடல் ஆடியது. பிரம்மாவின் கட்டளையின் படி யமதர்மன் ஒரு பெரிய மலையை எடுத்து அவனுடைய தலையின் மீது வைத்தான். அப்பொழுதும் அவனுடைய உடலசைவு நின்றபடி இல்லை. விஷ்ணுவிடம் பிரம்மா முறையிட்டார். விஷ்ணு தன்னுடைய மூன்று வடிவங்களான ஜனார்த்தனர், புண்டரீகர், கதாதர் ஆகியவற்றை வைக்கச் சொன்னார். பிரம்மா ஐந்து வடிவமெடுத்து அவற்றை வைத்தார். ஆனாலும் உடலசைவு நின்றபடி இல்லை.

விநாயகரும், சூரியனும் அமர்ந்தார்கள், லக்ஷ்மியும் கௌரி மங்கலாவும் அமர்ந்தார்கள், காயத்ரியும் பார்வதியும் அமர்ந்தார்கள் எதற்கும் உடலசைவு நிற்கவில்லை. ஆடிக்கொண்டே இருந்தது. கடைசியில் விஷ்ணு தனது கதையை வைத்தார். அப்பொழுதுதான் உடல் அடங்கியது.

"வைகுண்ட நாதனின் ஒரு வார்த்தையால் எனது உடல் அடங்கி இருக்கும். அவருடைய கதையால் என்னுடைய உடல் அடங்கியது எனது பாக்கியம். உயிர் அடங்கினாலும் உடல் அடங்க இறைவனின் சித்தம் வேண்டும்" என்று கயாசுரன் பக்தியுடன் சொன்னான். இவனுடைய இனிய மொழிகளைக் கண்ட தேவர்கள் அவனுக்கு வரங்கள் அளிக்க முன்வந்தனர்.

அதற்கு அவன் "சூரியனும் சந்திரனும் நட்சத்ரங்களும் பூவுலகும் இருக்கும் வரை எல்லாத் தெய்வங்களும் என்னுள் இங்கு உறைய வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரத்தம் செய்பவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் பிரம்மா யோகம் சித்திக்க வேண்டும். அவர்கள் எல்லா வகைப் பாவங்களும் நீங்கி புண்ணியம் அடைய வேண்டும்." என்று வரம் கேட்டான்.

உலக உயிர்களின் மீது இப்படி ஒரு நல்ல என்னமா என்று தேவர்கள் அனைவரும் வியந்தனர். அந்த வரத்தை தருவதாக வாழ்த்தினர். கயாசுரனும் மகிழ்ந்தான்.

ராமாயணத்தில் நிரஞ்சனா என்றும் தற்போது ஃபால்கு என்றும் அழைக்கப்படும் நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு நாளை பயணமாகப் போகிறோம்.