Saturday, October 25, 2008

Vindhyavasini temple, Pokhara

29-09-2008: பீவா ஏரியிலிருந்து விந்தவாசினி கோவிலுக்கு சென்றோம். விடுதியிலிருந்து 20 நிமிட நேர பயணத்தில் இக்கோவிலை அடைந்தோம். 60 முதல் 70 படிகள் மேலேறிதான் கோவிலை அடைய வேண்டும். பயணம் முழுவதுமே சரியான டூர் கைடு இல்லாதது குறையாகவே இருந்தது. எனவே குறிப்பிட்டு சொல்லக்கூடிய எந்த குறிப்பையும் எங்களால் எடுத்துக்கொள்ள இயலவில்லை.

இவ்வளவு நாள் மன்னராட்சியில் இருந்த நேபாள் முதன்முறையாக மக்களாட்சியின் மூலம் அரசை கைப்பற்றியுள்ளது. அதுவும் காயத்ரி பூஜை நேரம் என்பதால் விழாக்கோலமாக இருந்தது. கோவில்களின் வடிவமைப்பு நம்மிலிருந்து வேறுபட்டிருப்பதால், கோவில்களில் தான் இருக்கிறோம் என்ற உணர்வு எனக்குள் இல்லாமல் இருந்தது. எனக்கு சிவனை பார்க்கும் பொழுதுதான் கோவில் என்ற உணர்வே வருகிறது. மற்றபடி சுற்றுலா இடமாக மட்டுமே பார்க்கமுடிகிறது.

எந்த கோவிலுக்கு சென்றாலும் 5 நிறங்களையுடைய துணிகளில் ஏதோ எழுதி தோரணம் போல் தொங்குவதை பார்க்க முடிந்தது. யாரிடம் கோட்டாலும் இதற்கான பதில் கிடைக்கவில்லை.

சுமார் அரை மணி நேர தரிசணத்திற்கு பிறகு இங்கிருந்து புகழ்பெற்ற தேவின் அருவி மற்றும் குப்தேஸ்வர் குப்தா என்ற குகை கோவிலுக்கு புறப்பட்டு, வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளின் வழியே பயணம் செய்து தேவின் அருவியை அடைந்தோம்.

பயணிப்போம்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.

Friday, October 24, 2008

Pokhara, Fewa lake, Barahi temple

பீவா லேக் நேபாளிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய ஏரி. இங்கு படகு சவாரி செய்துகொண்டு அன்னபூர்ணா சிகரத்தை பார்பது மிகவும் அழகாக இருக்கும். நிறைய படகுகள் சவாரி செய்ய கிடைக்கின்றன. இந்த ஏரியின் நடுவில் பராகி கோவில் உள்ளது. படடு மூலமாக அங்கு சென்று அம்மனை வழிபடலாம். கோவிலுக்கு செல்பவர்கள் மீன்களுக்கு இறை போடுகிறார்கள். பெரிய பெரிய மீன்கள் இறையெடுக்க வருகின்றன.

இந்த ஏரியை ஒட்டியே நிறைய தங்கி செல்லும் விடுதிகள் இருக்கின்றன. இரு குழுக்கள் ஒன்றாக சென்றதால் ஒரு குழு Hotel moon Light-லும், மற்றொரு குழு Hotel lakeside-லும் தங்கியிருந்தோம். ஒரு நாள் தங்குவதற்கு ஏற்ற இடமாகத்தான் இருந்தது.

போக்ராவில் நிறைய Restaurant இருக்கின்றன. இரவு நேரங்களில் இங்கு நேபாள பாரம்பரிய நடனம் ஆடுகிறார்கள். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாக இருக்கிறது. இந்த நடனம் பலருக்கு பகுதி நேர வேலையாக இருக்கிறது. பல மாணவர்கள் மாலை நேரங்களில் இது போன்ற தங்கும் விடுதிகளில் ஏதோ ஒரு வேலை செய்து பிழைக்கிறார்கள்.

இந்த நடனத்தை தடை செய்யப்போவதாகவும், அப்படி செய்வதால் பாதிக்கப்படுபவர்களுக்காக ஒரு பெண் குரல் கொடுத்ததையும் நாளேடுகளில் படித்தேன்.

இங்கு மூலிகை மசாஜ் பல இடங்களிலும் செய்கிறார்கள். பல வெளிநாட்டவர்கள் மசாஜ் செய்து கொள்கிறார்கள். எனக்கு கழுத்தில் சுளுக்கு இருந்ததால் மசாஜ் செய்துகொள்ளலாம் என்று வினோத்தும் நானும் சென்று விசாரித்தோம். நேரமின்மையால் வந்துவிட்டோம்.

You tube link: http://in.youtube.com/watch?v=EGcF52pXlN0

பயணிப்போம்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.

Nepal money value

நேபாளுக்கு செல்வதற்கு முன் 500 மற்றும் 1000 ரூபாய்களை எடுத்து செல்ல கூடாது, மீறி எடுத்து சென்றால் சோதனை செய்யும் போது எடுத்துக்கொள்வார்கள், மறுபடியும் தரமாட்டார்கள் என்று பயப்படுத்தினார்கள். அப்படி எதுவும் அங்கு நடப்பதாகத் தெரியவில்லை. 

நான் பார்த்து சில இடங்களில் சர்வ சாதாரணமாக இந்திய பணத்தை நேபாள பணமாக மாற்றிக்கொண்டு இருந்தார்கள். சில பதிவு செய்த பண மாற்று குழுமங்களும் இருக்கின்றன. கடைகளிலும் எந்த பணத்தை கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை தரும்போது நேபாள பணத்தைத்தான் தருகிறார்கள்.
இது சோனாலி, போக்ரா, காத்மண்டு என எல்லா இடங்களிலும் நடந்தது. முக்கியமாக ஒரு பொருள் 90 ரூபாய் என்று சொல்கிறார்கள். நாம் இந்திய பணம் 100 ரூபாய் கொடுத்தால் 10 ரூபாய் நேபாள் பணத்தை மீதி தருகிறார்கள்.ஆனால் அவர்கள் நமக்கு தர வேண்டியது 16 நேபாள பணம். இதனால் நமக்கு 6 நேபாள ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எல்லோரும் இப்படிதான் என்று இல்லை. சிலர் ஏமாற்றுகிறார்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கம்பளி மற்றும் காலணிகள் நேபாளில் மளிவு என்று செல்கிறார்கள். ஆனால் சென்னையில் கூட அதே விலைக்கு பொருட்கள் கிடைக்கின்றன. Reebok, Adidas போன்ற பொருட்கள் பார்வைக்கு இருக்கிறது ஆனால் உண்மையான பொருட்கள் தானா என்று சந்தேகமாக இருக்கிறது. பெட்டி கடைகளில் கூட பீர் ம்ற்றும் ஆல்கஹால் கிடைக்கிறது. நிறைய பேர் ஏமாறுவது இங்கு தான். ஒரு பீர் 75 ரூபாய் என்றால், இவர்கள் 100 ரூபாய் தருகிறார்கள், 25 நேபாள பணம் மீதி கிடைக்கிறது. இவர்களின் 100 இந்திய நாணயம் 160 நேபாள நாணயத்திற்கு சமம். இதன் மூலம் இவர்களுக்கு 15 நேபாள நாணயம் நட்டம். இவ்வாறு ஒவ்வொரு பொருளுக்கும் கணக்கெடுத்தால் கணிசமான நட்டம் ஏற்படுகிறது. எனவே பணவிஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

பயணிப்போம், 
கிருஷ்ணப் பிரபு, 
சென்னை.

Thursday, October 23, 2008

Buddha's late night journey

சித்தார்தரின் தாய் மாயாதேவி அவரை ஈன்றெடுத்த 7 நாட்களில் இறந்து போனாளாம். ஆதலால் சுத்தோதனர் மாயாதேவியின் தங்கையான பிரஜாவதியை மணந்து கொண்டாராம். பிரஜாவதியும் சித்தார்தரை பாராட்டி, சீராட்டி பாசத்துடன் வளர்த்தாராம். மேலும் தனது சகோதரனின் மகளான யசோதரையை சித்தார்தரின் ஆசைப்படி மணமுடித்தாளாம். சித்தார்தனுக்கு மூன்று பருவ காலங்களிலும் மூன்று அரண்மனை என குறைதெரியாமல் வளர்த்தாளாம். 

இன்பமாக வாழ்ந்த அவர் ராகுலனையும் பெற்றார்.ராகுலன் பிறந்த சில நாட்களிலேயே அவர் துறவு பூண்டார். போகும் போது ராகுலனை எடுத்து கொஞ்சி மகிழ ஆசைப்பட்டாராம். ஆனால் எங்கே அவன் கண்விழித்து யசோதரை எழுந்து விடுவாளோ என்று, இருவரையும் ஒருமுறை பார்த்து விட்டு சென்று விட்டாராம்.

சந்தனன் தயாராக வைத்திருந்த தேரில் சித்தார்த்தரை, அரண்மனையே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அழைத்துக் கொண்டுபோய் காட்டில் இறக்கி விட்டானாம். நீண்ட தூரம் நடந்து சென்ற அவர், வழியில் ஒரு வேடனை பார்த்தாராம். இவர் உடுத்தியிருந்த விலை உயர்ந்த பட்டாடைகளை அவனுக்கு கொடுத்துவிட்டு, அவன் அணிந்திருந்த தோலாடையை இவர் வாங்கி உடுத்திக் கொண்டாராம்.

இப்படி சென்ற அவர் இரண்டு அந்தனர்களின் குருகுலத்தில் தியான பயிற்சியில் ஈடுபட்ட அவர், பயிற்சியில் திருப்தி அடையவில்லை. இவர் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற இயலவில்லை. அவர் கேட்ட கேள்விகள், துக்கத்திற்கான காரணம் என்ன? அதை எப்படி நிவர்த்தி செய்வது.

குருகுலத்தில் இருந்தால் இதற்கான காரணம் தெரிய வராது என்று கடுமையான தவத்தை மேற்கொள்ள சரியான இடத்தை தேடி சென்றாராம். அப்படி செல்லும் போது, குருகுலத்திலிருந்த அவருடைய நண்பர்கள் நாலுபேர் அவருடன் சென்றர்களாம். இப்படி அவர்கள் போனபோது தியானத்திற்கான இடமாக தேர்ந்தெடுத்த இடம் தான் புத்த கயா.சித்தார்த்தர் புத்தரான கதையை கயாவில் பார்க்களாம். நேபாளத்தின் ஒரு சில பகுதிகளை பார்த்து விட்டு அங்கு வருவோம்.

இங்கிருந்து 20 கிமீ தொலைவில் தான் லூம்பினி இருக்கிறது. ரிக்ஷா வண்டிகள் நிறையவே இங்கு இருக்கிறது. அதில் சென்றிருந்தால் கூட மாலை 6 மணிக்குள் திரும்பியிருக்களாம். டூர் மேனேஜருடன் பிரச்சனை என்பதால் அவர் இது போன்ற விஷயங்களை மறைத்துவிட்டார்.

பட்வாலிலிருந்து இரவு 8.30 மணிக்கு போக்ராவை நோக்கி பயணத்தை துவக்கினோம். இரவெல்லாம் பயணம் செய்து காலை 6.30 மணிக்கு போக்ராவை வந்தடைந்தோம்.

பயணிப்போம், 
கிருஷ்ணப் பிரபு, 
சென்னை.

Prince Siddhartha Gautama's desire

தினமும் ஒரே வழியில் சென்ற சித்தார்தருக்கு தான் பிறந்த லூம்பினியை பார்க்க ஆசை வந்ததாம். ஆகவே சந்தனா தேரை கிழக்கு வாசல் வழியாக செலுத்து நான் லூம்பினி போகவேண்டும் என்றாராம். சந்தனன் எவ்வளவோ போராடியும் பலனில்லை, அரண்மனையின் கிழக்கு வாசல் வழியாக தேரை ஒட்டினானாம். எதிரில் தலை வெளுத்து, எலும்புகள் தெரிய ஒரு வயோதிகன் வந்தானாம்.

(சி-சித்தார்தன், ச- சந்தனன்)  

சி: ஏன் சந்தனா இவன் இப்படி இருக்கிறான்? 
ச: நமக்கு ஏன் அரசே அது! வாருங்கள் அரண்மனைக்கு திரும்பலாம்.  
சி: இல்லை எனக்கு பதில் சொல், ஏன் அப்படியிருக்கிறார்?  
ச: வயோதிகம் அரசே, இது அனைவருக்கும் வரும்.  
சி: அப்படி என்றால் நமக்குமா?  
ச: ஆம் அரசே.  
சி: இவ்வளவு தானா வழ்க்கை.அப்படி என்றால் தேரை அரண்மனைக்கு திருப்பு.  

சரி வடக்கு வாசல் வழியாக தேரை செலுத்து. இங்கு பிச்சைக்காரன் எதிரில் வந்தானாம்.

சி: இவன் யார் சந்தனா, ஏன் இப்படி வருகிறான்... இதுவரை நான் இது போல் பார்த்ததில்லையே?  
ச: அதுவா அரசே! பிச்சை எடுத்து உண்பவர்கள். 
சி: அப்படி என்றால்?  
ச: பிழைப்பதற்கு வழியில்லாதவர்கள் அரசே.  
சி: இப்படியும் நடக்குமா வழ்க்கையில்?  
ச: ஆம் அரசே. 
சி: இவ்வளவு தானா வழ்க்கை.அப்படி என்றால் தேரை அரண்மனைக்கு திருப்பு.

சரி மேற்கு வாசல் வழியாக தேரை செலுத்து சந்தனா. இங்கு பிணியுடையவனை சூழ்ந்து கொண்டு சிலர் அழுது  ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்களாம்.

சி: இது என்ன சந்தனா?  
ச: அதுவா அரசே, அவன் சிறிது நேரத்தில் மரணமடையப்போகிறான். அதற்குப் பிறகு அவனால் இவர்களுடன் பேச முடியாது.அதற்கு தான் அழுகிறார்கள்.  
சி: அப்படியென்றால் இந்த வாழ்க்கையில் எல்லாம் அழியக்கூடியதா...
ச: ஆம் அரசே. 
சி: பிறகு எதற்கு இந்த தேவையில்லாத களிப்பு.

கடைசியாக கிழக்கு வாசல் வழியாக தேரை செலுத்தினான் சந்தனன். இங்கு தலைமுடி மழித்த பிட்சு திருவோடேந்திக்கொண்டு, முகத்தில் அமைதி தழுவ வந்து கொண்டிருந்தானாம்.  

சி: இவன் யார் சந்தனா, இவ்வளவு அழகாக இருக்கிறானே?  
ச: அவனைப் பற்றி நமக்கெதற்கு அரசே, வாருங்கள் அரண்மணைக்கு செல்லலாம்.  
சி: இல்லை அவர் யாரென்று சொல்?  
ச: அரசே...அவர் புத்த பிட்சுக்களில் ஒருவர், எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள். ஞானத்தை தேடுபவர்கள். அவர்களுக்கு ஆசை, துக்கம் எதுவுமே இல்லை.  
சி: அப்படி என்றால் இதுவள்ளவா சிறந்த வாழ்க்கை.

சித்தார்தர் என்றால் இலட்சியம் அனைத்தையும் அடைந்தவன் என்று பொருள். சித்தார்த்தர் பிட்சுக்களின் வாழ்க்கையை யோசித்துக்கொண்டு வரும் போது, ஒரு சேவகன் தேரினருகில் வந்து தங்களுக்கு ஆண் மகன் பிறந்திருக்கிறான் என்றானாம். அதை கேட்டவுடன் ராகுலன் என்றாராம், ராகுலன் என்றால் பாலி மொழியில் கைவிலங்கு என்று பொறுள். அதுவே அவரது மகனின் பெயராகவும் அமைந்துவிட்டது.  

பயணிப்போம், 
கிருஷ்ணப் பிரபு, 
சென்னை.

Buddha's birth place,Lumbini

லூம்பினி புத்தர் பிறந்த இடம் என்பதையும் மீறி, அவர் அங்கு செல்ல ஆசைப்பட்டதாலேயே துறவு செல்ல நேர்ந்தது. சாக்கிய மரபில் வந்த கோசல மன்னரான சுத்தோதனருக்கும், கோலிய மன்னரின் மகளான மஹா மாயா தேவிக்கும் சித்தார்தர் பிறந்தார். நீண்ட நாட்களாக கருத்தரிக்காமலிருந்த மாயா தேவி பல பூஜைகள் செய்து, வரம் வாங்கி இவரை பெற்றாராம். நீண்ட நாள் கழித்து கருத்தரித்ததால் மாயாதேவி தாயார் வீட்டிற்கு சென்று குழந்தை பெற விரும்பினாலாம். அப்படியே அவள் தேவதாஹத்தை நோக்கி செல்லும் போது லூம்பினி என்ற இடத்திலுள்ள பூஞ்சோலையில் தங்கிச் செல்ல ஆசைப்பட்டாலாம். நல்ல வைசாக பவுர்ணமி நாளில் சால மரத்திலுள்ள பூவை பறிக்க ஆசைப்பட்டு மாயா செல்லும் போது சித்தார்தர் பிறந்தாராம்.  கி.மு 250 களில் புனித புத்த ஸ்தலங்களுக்கு மௌரிய மன்னன் அசோகன் பயணம் செல்லும் போது, இந்த இடத்தை அடையாலம் கண்டு ஒரு ஸ்தூபியை நிறுவி, வரி விலக்கு போன்ற சலுகைகளை இந்த இடத்திற்கு வழங்கினானாம். ஜெர்மானிய ஆரய்ச்சியாளர் நேபாள காடுகளில் பயணம் செய்யும் போது இதை கண்டுபிடித்து உலகுக்கு சென்னாராம்.

சித்தார்தருக்கு பெயர் வைக்கும் வைபவத்தில் 8 அந்தனர்கள் அழைக்கப்பட்டார்களாம். அவர்கள் 8 பேரும் இவன் பிற்காலத்தில் ஒன்று உலகையே ஆளும் அரசனாவான், இல்லையேல் துறவு பூண்டு மகானாவான் என்றார்களாம். அதுமுதல் சுத்தோதனர் இவரை துன்பமே தெரியாமல் வளர்க்க நினைத்தாராம். ஒரு சூழ்நிலையில் சித்தார்தருக்கு அரண்மனையை விட்டு வெளியில் செல்ல ஆசை வந்ததாம். அரசரும் சித்தார்தர் செல்லும் வழி முழுவதும் தோரணங்கள் கட்டி தெருவையே திருவிழா போல் மாற்றச்சொன்னாராம். தினமும் இவ்வழியாக மட்டுமே செல்லவேண்டுமென தேரோட்டிசந்தனனுக்கு ஆணை பிறப்பித்தாராம். சந்தனனும் அது போலவே செய்தானாம்.

யணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Butwal - Nepal

இன்று(28-09-2008) காலையில் எழுந்து என் அறையில் முதல் ஆலாக தயாராகி இருந்தேன். அனைவரும் தயாராவதற்குள் வந்துவிடலாம் என்று சிறிது தூரம் வெளியில் சென்றேன். சரியாக காலை 5.15 மணி இருக்கும் நேபாள காவலாட்கள் அந்த நேரத்தில் சுற்றிக்கொண்டு இருந்தார்கள். சிறுவர்கள் சிலர் ஓட்டப்பயிற்சி செய்துகொண்டு இருந்தனர்.  
இன்று உலக சுற்றுலா தினம் என்பதால், குறிப்பாக நேபாள் சுற்றுலா தளம் என்பதால் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்று ஒரு சிந்தனை இருந்தது. நான் வெளியில் சென்று வருவதற்குள் எல்லோரும் தயாராக இருந்தார்கள். இன்று காலை நான் எதுவும் சாப்பிடவில்லை. மற்ற அனைவரும் சாப்பிட்டு தயாராக இருந்த வேலையில் இன்று முழுவதும் சாலை மறியல் வண்டிகள் ஓடாது என்று டூர் மேனேஜர் தெரிவித்தார். இங்கும் ஒரு சலசலப்பு எழுந்தது. ஆண்கள் மட்டுமென்றால் பரவாயில்லை, உடன் பெண்களும் வந்திருந்ததால் அவர்கள் வெளியில் அமர்ந்துகொள்ள வசதியில்லாமல் இருந்தது. சண்டை போட்டு மதியம் வரை அவர்கள் உபயோகப்படுத்த வசதி செய்து கொடுத்தார்கள். மதியம் வேறிடத்தில் வாடகைக்கு இடம் பார்த்து எங்களை அழைத்து சென்றார்கள். சொனாலியிலிருந்து 20 கிமீ தொலைவில் தான் லூம்பினி இருக்கிறது. அங்கு சென்று வர ஏதாவது வழி இருக்குமா என்று நான் தனிப்பட்ட முறையில் எத்தனை முறை விசாரித்தும் பலனில்லாமல் போனது.

யணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Indo nepal borde, Butwal

எங்களுக்கு முன்பே தெரிவித்தபடி அயோத்தியிலிருந்து கொரக்பூர் சென்று அங்கிருந்து சொனாலி செல்வதாக ஏற்பாடு. ஆனால் இங்கிருந்து மாலை 6 மணிக்குள் நேபாள எல்லையில் இருக்க வேண்டும் இல்லை என்றால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என்று வேறு வழியாக சென்றார்கள். நாங்கள் அயோத்தியிலிருந்து மாலை 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் தான் சொனாலி சென்று சேர முடிந்தது.

இடையில் நாங்கள் சென்ற வழி முழுவதும் சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்து இருந்தது. பெரியதாக எந்த வசதியும் இல்லாத இந்த வழியை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது குழப்பமாகவே இருந்தது. பயணத்தில் எங்களுடன் வந்த ஒரு சிலரை தவிர அனைவரும் 40 வயதை கடந்தவர்கள். அவர்களை உடன் அழைத்துக் கொண்டு இந்த வழியாக சென்றது சிறிது நடுக்கமாகத்தான் இருந்தது. 

மாலை நேரத்தில் போகும் வழியில் தேநீர் அருந்த கூட வசதியில்லாத வழியாக இருந்தது. இரவு 7 மணிக்குள் சென்று சேர்ந்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள். பகலில் பயணம் செய்திருந்தால் பரவாயில்லை. இரவு நேரத்தில் ஒரு சிறு வெளிச்சம் கூட கண்களுக்கு தெரியாத சாலைகளின் வழியே பயணம் செய்தது சங்கடமாகவே இருந்தது.

நேபாள எல்லையை தாண்டி செல்ல ஒரு நபருக்கு 100 வீதம் அனைவரும் பணம் செலுத்திய பின்னரே உள்ளே செல்ல முடிந்தது. சிறிய சுவருடன் கூடிய வளைவு மட்டுமே எல்லையை பிரிக்கிறது. இந்திய எல்லையான சொனாலியிலும், நேபாள எல்லையான பட்வாலிலும் பல கடைகள் இருக்கின்றன.நாங்கள் நீண்ட பயணம் செய்து பின்னிரவில் இங்கு வந்ததால் நேராக ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டோம். ஹோட்டல் அறைகள் நன்றாக இருந்தாலும் ஈசல்கள் அதிகமாக தொல்லை செய்தன.

இரவு சாப்பாடு நீண்ட நேரம் கழித்து தான் பரிமாரப்பட்டது. இதனால் டூர் மேனேஜருக்கும் பயணிகளுக்குமிடையில் சிறிதாக விவாதம் வந்தது. நாளைய தினம் சித்தார்தர் பிறந்த இடத்தைக் காண அனைவரும் செல்வதர்க்காக உறங்க சென்றனர்.

பயணிப்போம்,
கிருஷ்ணப்பிரபு,
சென்னை.

Wednesday, October 22, 2008

Buildings in Ayodhya, Ramajanma bhoomi, Ram boomi

அயோத்தியில் காணப்படும் கட்டிடங்களில் பழமையானது எது, மிகவும் பழமையானது எது என்று பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகிறது. ஏனெனில் தசரத மகாராஜா துவங்கி, இஸ்லாம் மன்னர்கள் வரை பலர் ஆண்டுள்ளனர். ஆகவே இது இந்து, முஸ்லிம் மற்றும் ஜைன மன்னர்களின் கீழ் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் அவரவர் தமது இயல்புக்கு ஏற்ப கட்டிட அமைப்பை மாற்றியது போல் தெரிகிறது.

தசரத மகாராஜா தங்கிய இடம், சீதா கல்யாணத்தின் போது ஜனக மகாராஜா தங்கிய இடம், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்த இடம், ராமர் துறவரம் மேற்கொண்ட இடம் என்று பல இடங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதில் சிறப்பு என்னவெனில் ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடம் ராமஜென்ம பூமி. இங்கு முஸ்லிம் மன்னர்கள் காலத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. ஆக ராமவிரும்பிகள் மசூதியை இடித்துவிட்டு ராமருக்காக கோவில்கட்ட ஆரம்பித்தார்கள். இது ராமர் கோவில், மசூதி என்பதையும் தாண்டி, இந்து முஸ்லீம் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்த இடத்தில் பூஜை நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இருந்தாலும் பார்வையாளர்கள் பார்க்க மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். 8 அடிக்கு 8 அடி உள்ள இந்த இடத்தில் ராமரின் சிறிய படம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைக்கான பல வித சோதனைகளுக்கு உட்பட வேண்டும். சுமார் 1 கிமீ நடந்து செல்லவேண்டியுள்ளது.புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. மேலும் இரும்பு, தோல் மற்றும் வேதி பொருட்கள் எடுத்து செல்ல அனுமதியில்லை. இந்த இடத்தில் ராமருக்காக கோவில் கட்டியே தீருவேன் என்று 8 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

இவர் எப்படி ஒன்றுமே சாப்பிடாமல் இப்படி புஷ்டியாக இருக்கிறார். சர்மிளா டாகூர் கூட பல வருடங்களாக நீராகாரம் மட்டுமே சாப்பிடுகிறார் என்று தெரியும்.ஆனால் எலும்பும் தோலுமாக இருக்கிறார். இவர்கள் மட்டும் எப்படி?

சரி என்று பார்த்தால், கோவில் கட்டுவதற்காக பணம் வசூல் செய்தார்கள். 1000 ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு வருடமும் ராம நவமியில் பூஜை செய்து வீட்டிற்கு பிரசாதம் தருவதாக சொன்னது தான் தாமதாம் என் குழுவிலிருந்து 10 பேர் உடனே செலுத்தினார்கள். மேலும் 50,100,500 என அவரவர் சக்திக்கு ஏற்ப தனது பங்களிப்பை செய்தார்கள். ஆனால் ரூபாய் 1000 செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் பிரசாதம் வீடு தேடி வரும்.

இவர் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு சமையலறை இருக்கிறது. இது சீதை சமையல் செய்த இடம் என்று செல்கிறார்கள். மக்கள் திரளாக சென்று பக்தியுடன் பார்க்கிறார்கள். ராமர், பாபர் மசூதி இவற்றை தவிர ஜைனர்களுக்கான முக்கிய இடமாகவும் இது கருதப்படுகிறது.

கண்களை மூடி ராமரை அழைத்தாலும், ஹேராம் படத்தில் காந்தி இறக்கும்போது கூறிய "ஹே...ராம்.. " என முனகலாகத்தான் வருகிறது. ஆக ஆன்மீகம் போதிக்கும் அமைதியை மீறிய கலவர பூமியாக அயோத்தி இருக்கிறது.

பயணிப்போம்,
கிருஷ்ணப்பிரபு,
சென்னை.

Ayodhya travel, Ramajanma bhoomi


மதிய உணவு முடித்து அலகாபாத்திலிருந்து 150 கிமீ பயணம் செய்த நாங்கள் இரவு 8 மணிக்கு அயோத்யா வந்து சேர்ந்தோம்(26-09-2008). இங்கு(27-09-2008) ஹோட்டால் மானசரோவரில் இரவு தங்கி இளைப்பாறி காலை 8 மணிக்கு சரயு நதிக்கரையில் நீராட சென்றோம்.

நாங்கள் பயணம் செல்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்ததால் அற்றில் அதிகப்படியான நீர்வரத்து இருந்தது. உடன் பயணம் செய்த பலரும் ஆனந்தமாக நீராடினார்கள்.

வேத நூல்களில் கூட இதன் பெயர் சில இடங்களில் வருகிறதாம். இந்த நதிதான் எத்தனை ரகசியங்களை தன்னுள்ளே வைத்துக் கொண்டு நீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காலத்துடன் சுழல்கிறது. தசரத மகாராஜா இங்குதான் ஒரு பாவத்தை தன்னையும் அறியாமல் செய்ததாக சிறுவயதில் படித்தது ஞாபகத்திற்கு வருகிறது.

ஷர்வன்(சரவண)குமார் என்ற சிறுவன் தனது பார்வையற்ற பெற்றோருக்கு தண்ணீர் கொண்டு வர சரயு நதிக்கு சென்று குவளையில் நீர் எடுக்கும் போது, வேட்டையாட வந்த மகாராஜா குவளையில் நீர் சேரும் சப்தத்தை தவறாக நினைத்து அம்பெய்து அவனைக் கொன்றானாம். சாகும் நிலையில் இருந்த அவன் தனது பெற்றோருக்கு நீர் கொண்டு செல்லுமாறு மகாராஜாவிடம் தயக்கத்துடன் உதவி கேட்டானாம்.

மகனின் வருகைக்காகக் காத்திருந்த பெற்றோரிடம் நடந்ததை எடுத்துக் கூறிய தசரதன் அவர்களிடமிருந்து சாபம் பெற்றதாகவும், அதனால் ராமன் வனவாசம் சென்றதாகவும், அந்த பிரிவு தாளாமல் தசரதன் மாண்டதாகவும் கதை விறியும்.

அது மட்டுமின்றி விஷ்ணுவின் 7 வது அவதாரமான ராமன் சரயு நதியில் இறங்கி ஜலமோக்ஷம் அடைந்ததாக புராணம் செல்கிறது. எனவே இங்கு பலரும் பக்தியுடன் நீராடுகிறார்கள்.

சில வடஇந்தியர்கள் சுமங்களி பூஜையை இந்த சரயு நதிக்கரையில் செய்கிறார்கள். கரையை ஒட்டிய கடைகளில் பூஜைக்கு தேவையான பொருட்கள் கிடைக்கின்றன.

சரயு நதிக்கரையில் தான் தசரத மகாராஜா தினமும் குளிப்பாராம். இந்த நதிக் கரையில் தான் லக்ஷ்மண் கட்(மயாணம்) இருக்கிறதாம். எது இருக்கிறதோ இல்லையோ அயோத்தி எங்கும் திருப்பும் திசை யாவும் ஆஞ்சனேயர்(குரங்குகள்) இருக்கிறார்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.


All Saints Cathedral Allahabad

அலகாபாத்திலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயம் 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதன் நுண்ணிய வேலைப்பாடுகள் சிறப்பாக உள்ளது. மரத்தினால் செய்யப்பட்ட நாற்காலி, மர மேசை மற்றும் பாவ மன்னிப்பு கேட்கும் அறை ஆகியவை சிறப்பாக வடிவமைத்திருக்கின்றனர்.

கண்ணாடி பேழைகளால் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள் மிகவும் அழகு சேர்கிறது. இது ஐரோப்பிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அலகாபாத்திலுள்ள புனித ஸ்தலங்களுக்குள் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. தேவாலயத்தை சுற்றிலும் உள்ள பசுமையான மரங்கள் கண்களுக்கு குளிர்சியாக இருக்கிறது. ஆனால் தேவாலத்தினுள் சரியான பராமறிப்பு இல்லை. சுத்தமாக வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

இங்கிருந்து புறப்பட்டு தங்கியிருந்த இடத்திற்கு வந்து மதிய உணவு முடித்து, ராமஜென்ம பூமியான அயோத்தியா நோக்கி பயணம் செய்தோம்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Ananda bhavan, Swaraj bhawan

நேரு குடும்பத்தின் பூர்வீக இல்லமான ஆனந்த பவன் மற்றும் ஸ்வராஜ் பவன் அலகாபாத்திலுள்ள முக்கிய சுற்றுலா இடமாகும். ஆனந்த பவனில் மோதிலால் நேரு, ஜவஹலால் நேரு ஆகியோர் பயன்படுத்திய அறைகள் கண்ணாடி பேழைகளால் தடுக்கப்பட்டுள்ளது. அறையினுள் அவர்கள் பயன்படுத்திய படுக்கை மற்றும் மேஜைகள் உள்ளன. ஜவஹர் பயன்படுத்தியப புத்தகங்கள் மற்றும் தன் கைப்பட எழுதிய சில கடிதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனந்த பவனுக்கு அருகிலுள்ள ஸ்வராஜ் பவன் 1930-ல் மோதிலால் நேருவால் தேசிய இந்திய கங்ரசுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இங்குதான் இந்திரா காந்தி பிந்தாராம்.

இந்திய விடுதலை போராட்டத்திற்காக எடுக்கப்பட்ட பல முடிவுகள் இங்குதான் எடுக்கப்பட்டதாம். அதற்காக காந்தி அலகாபாத் வரும்போதெல்லாம் ஆனந்த பவனில் தான் தங்குவாராம். அவர் பயண்படுத்திய அறையும் கண்ணாடி பேழையால் தடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த பவனை இந்திரா காந்தி 1970-ல் நாட்டிற்கு அர்பணித்தாராம். அது முதல் இந்த இடம் அருங்காட்சியகமாக அரசால் பராமறிக்கப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் மற்றும் கல்வி பயன்பாட்டிற்கான Jawahar Lal Nehru planetarium இங்கு உள்ளது. ஆனந்த பவனுக்கு வெளியிலுள்ள பூங்காவில் பயணிகள் அமர கல் மேடை உள்ளது.

ஆனந்த பவனை சுற்றி பார்க்க நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளே சென்று புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. குழந்தைகள் வாங்குவதற்கான அறிவியல் பொருட்களும் இங்கு கிடைக்கிறது.

பயணிப்போம்,
கிருஷ்ணப்பிரபு,
சென்னை.

Tuesday, October 21, 2008

Allahabad Fort, akbar fort, yamuna river

அக்பரால் கட்டப்பட்ட பெரிய கோட்டைகளுள் அலகாபாத் கோட்டையும் ஒன்று. இது 1853-ல் அக்பரால் கட்டப்பட்டது. யமுனா நதிக்கரையின் பக்கத்திலேயே இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் பெரும் பகுதி ரானுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையின் ஒரு சில பகுதிகளை ஆற்றினை ஒட்டிய நுழைவாயிலின் வழியாக பார்க்க மக்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். நுழைவுக்கட்டணமாக சிறிது வசூலிக்கிறார்கள் ஆனால் புகைப்படம் எடுக்க அநுமதியில்லை.

கோட்டையின் மதில் சுவர்களில் சில செடிகள் காணக்கிடைக்கின்றன. இது கோட்டையின் ஆயுளை குறைக்க வழியுள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த நிலை ஆச்சர்யத்திற்குறியது. பல நூறு வருடஙகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட இதுபோன்ற கட்டிடங்கள் சிதைவதை வேடிக்கை பார்ப்பது இந்திய வரலாற்றின் சிதைவை பார்பதற்க்கு சமம்.

இந்த கோட்டையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அநுமன் கோவில் உள்ளது. இங்கு அநுமன் படுத்த நிலையில் காணக்கிடைக்கிறார். அதைத் தொடர்ந்து சென்றால் ராம, லட்சுமண, சீதை காட்சி தருகிறார்கள்.

இங்கிருந்து பார்த்தால் சங்கர மடத்திற்கு சொந்தமான கட்டிடம் தெரிகிறது. நேரமின்மையால் அங்கு செல்லாமல் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பவேண்டியதாக இருந்தது. 

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Monday, October 20, 2008

Allahabad triveni sangamam, Prayag,kumbh mela

26- ம் தேதி காலை 7 -மணிக்கு புறப்பட்டு திருவேணி சங்கமத்தை அடைந்தோம். டூர் கைடு யாரும் எங்களுக்கு இல்லாததால் சிறிது சிரமம் இருந்தது. அலகாபாத்திற்கு ப்ரயாகம்( இரு ஆறுகள் சேரும் இடம்) என்ற பெயரும் உண்டு. இதிகாச காலத்தில் பரத்வாஜ முனி இங்கு குடில் அமைத்து பல சீடர்களுக்கு குருகுல கல்வி போதித்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்பொழுது இராமபிரான் இங்கு வந்ததாகவும், அவரிடம் ஆசி வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

நாங்கள் சென்ற பொழுது ஆற்றின் வேகம் சீராக இருந்ததால் ஆற்றின் மையத்திற்கு படகு மூலமாக சென்று பூஜை செய்ய டூர் மேனேஜர் ஏற்பாடு செய்தார். ஒரு நபருக்கு 40 -ரூபாய் என்னிடம் தரவேண்டும் என்றார். அதற்கு எல்லோரும் சம்மதித்தன்ர்.

பூஜை செய்ய வந்த பிராமணர் எங்களது படகில் வந்ததால் "பாருங்கோம்மா இது தான் கங்காம்மா, அதோ அது தான் யமுனா நதி. இந்த இரண்டு நதிதாம்மா இங்க சேர்ரது". சரஸ்வதிய மனசுல கூப்பிட்டுக்கோங்க. சரஸ்வதி இங்க கண்களுக்கு தெரியாம மற்ற ரெண்டு நதியோட கலந்துட்ரது" என்றார்.

தசரத மகாராஜாவிற்கு தர்பனம் கொடுப்பதற்காக சீதா தேவி ராம, லட்சுமணர்களுக்காக ப்ரயாகத்தில் அமர்திருந்தாள். ஆனால் தசரத மகாராஜா தனக்கு அதிக பசியாக இருப்பதாகவும், ஆகவே கொடுக்கவேண்டிய பட்சணங்களை சீக்கிரமாக கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டாராம். சீதை ராம, லட்சுமணர்களுக்காக காத்திருப்பதாகவும், சிறிது நேரம் பொருத்துக்கொள்ளுமாரும் கேட்டுக்கொண்டாளாம். ஆனால் அவருடைய கோரிக்கையை அரசர் ஏற்றுக்கொள்ளாததால், அரசருக்காக கொண்டுவந்த பட்சனங்களை ஆகம விதிப்படி அளித்தாளாம். மகாராஜாவும் மகிழ்சியுடன் சென்றுவிட்டாராம்.

தாமதமாக வந்த ராம லட்சுமரிடம் நடந்த விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறாள். இதை நம்பாத அவர்கள் அதற்கான சாட்சியங்களை கேட்டார்கலாம். அதற்கு அவள் சரஸ்வதி, பசு உட்பட ஐந்து சாட்சியங்களை அழைத்ததாகவும், அதற்கு சரஸ்வதி சாட்சி கூற வரவில்லையாதலால் "இன்றிலிருந்து இந்த இடத்தில் நீ யார் கண்களுக்கும் தெரியாமல் காணாமல் போவாய்" என்று சபித்ததாகவும் கூறப்படுகிறது. அன்றிலிருந்து கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இந்த இடத்தில் சரஸ்வதி கண்களுக்கு தெரியாமல் இரு நதிகளுக்கு அடியில் ஓடுவதாகவும் நம்பப்படுகிறது (சிலர் ஆகாயமார்கமாக சரஸ்வதி இந்த இடத்தில் வந்து கலப்பதாகவும் சொல்லுகிறார்கள்). ஆக கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இங்கு கலப்பதால் இது திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.

சீதையே இங்கு வந்து முன்னோர்களுக்கான மரியாதையை செய்ததால், நாமும் அதை இங்கு செய்தால் நல்லது என்று இந்துக்களால் நம்பப்படுகிறது. மேலும் சுமங்களி பூஜையும் இங்கு செய்யப்படுகிறது. அர்சகர்களுக்கு தகுந்தார் போல் அதற்கான தட்சணையும் மாறுபடுகிறது. முன்னோர்களுக்கான புண்ணியம் என்று சொல்லி பல நூறு ரூபாக்களை ஏமாற்றுகிறார்கள். ஆகவே சரியான புரோகிதர் மூலம் செய்வது நல்லது.

திரிவேணி(ப்ரயாக்),ஹரித்வார்,உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் கும்ப் மேளா இந்திய அளவில் நடக்கும் முக்கியமான விழாவாகும். ஆக இந்த விழா 12 வருடங்களுக்கு ஒரு முறை அலகாபாத்தில் நடக்கிறது. திருவிழா சமயத்தில் அலகாபாத்தை சுற்றி 5 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் ஓட அனுமதி கிடையாதாம். அந்த நேரத்தில் 5 லிருந்து 10 லட்சம் பக்தர்கள் இங்கு கூடுவதாக சொல்கிறார்கள்.

புனித நதியாகக் கொண்டாடப்படும் இந்த இடத்தில் ஆற்றிலும் சரி, அதன் கரையிலும் சரி மாசுப்படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும். மனித மற்றும் கால்நடை கழிவுகளை அதில் கலக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். என்னதான் இதிகாசங்கள் இதன் புனிதங்களை எடுத்துக்கூறினாலும், அசுத்தமானது ஆன்மீகத்தையும் மீறி வேறுமாதிரி யோசிக்கவைக்கிறது. அடுத்த தலைமுறை கங்கை குளியலை வேடிக்கையாக பேச இது வழிவகுக்கிறது.

சுமார் ஒரு மணிநேர சங்கமக் குளியலுக்குப் பிறகு அதே படகு மூலமாக கரைக்கு வரும்பொழுது, சுற்றூலா தோழர் செந்தில் படகோட்டியிடம் ஒரு ஆளுக்கு எவ்வளவு என்று கேட்க, 25 ரூபாய் என்று அவன் சொல்ல டூர் மேனேஜரின் சுயரூபம் தெரியவந்தது.

இதிலிருந்து டூர் மேனேஜருக்கும் சுற்றுலா குழுவினற்கும் இடையில் ஒரு பனிப்போர் உருவானது. அந்த இடைவெளி சுற்றுலா முழுவதும், சாப்பாடு முதல் இடங்களை பார்வையிட அழைத்து செல்லுதல் வரை எதிரொலித்தது. அதனால் சரித்திர பெருமைவாய்ந்த பல இடங்களை வெரும் இடங்களாக மட்டுமே பார்கவேண்டியிருந்தது. இங்கு அலகாபாத்தை ஒட்டியுள்ள அக்பர் கோட்டை மற்றும் அநுமன் கோவிப்பற்றி அடுத்த பதிவில் பார்கலம். நன்றி

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு.
சென்னை.

Sunday, October 19, 2008

Train journey, north india tour

23-ம் தேதி இரவு பயணத்திற்கு வேண்டிய எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டேன். எல்லாவற்றையும் என்றால் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும். அதாவது 12 -நாட்களுக்கு வேண்டிய ஆடைகள், ஜெர்கின்,குல்லா, கையணி மற்றும் ரொட்டியுடன் Lion Dates syrup ஆகிய முக்கிய பொருட்களை எடுத்துக்கொண்டேன். சாப்பிடும் விஷயத்தில் சமாளித்துக்கொல்லலாம் என்று இந்த யோசனை.

அப்படி வேறு ஏதாவது தேவையென்றால் railway canteen-ல் வாங்கி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.

நாங்கள் சங்கமித்ரா விரைவு வண்டியில் முதலில் அலஹாபாத் சென்று, திரிவேணி சங்கமம் பார்வையிடலே பயணத்தின் ஆரம்பமாக இருந்தது. மாலை 3.30-மணிக்கு வருவதாக இருந்த ரயில் வண்டி சரியாக 3.50-க்கு வந்து சேர்ந்தது.

முன்னதாகவே ticket ரிசர்வேஷன் செய்ததால் தொல்லைகள் இருக்காது என்று நினைத்தால் சில Unreserved பயணிகள் எங்களது இருக்கையில் உட்கார்ந்துகொண்டு நகரவேயில்லை. ஒரு வழியாக அவர்களை சமாளித்து அவரவர் இடங்களில் அமர மூன்று மணி நேரம் போராடவேண்டி இருந்தது.

வினோத் எனக்கும் சேர்த்து கட்டு சாதம் கொண்டுவந்ததால் பயணம் செய்த இரண்டு நாட்களுக்கும், சாப்பாட்டிற்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் ரயில்வே கேன்டினின் உதவி தேவையில்லாமல் போனது. ஒரே ஒரு குறை பயணம் செய்தவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற யாவரும், என்னையும் சேர்த்து இரண்டு நாட்களாக குளிக்கவில்லை.

பயணத்தை சென்னை ரயில் நிலையத்தில் மாலை ஆரம்பித்ததால் இரண்டு இரவு, ஒரு முழு பகல் என பயணம் செய்து, சரியாக அதிகாலை 2-மணிக்கு அலகாபாத் இரயில் நிலையத்தை அடைந்தோம்.

எங்கள் பயணக்குழு தலைவர் அனைவரையும் காலை 7-மணிக்குள் தயாராக இருக்குமாறும், இங்கிருந்து திரிவேணி சங்கமம், அலகாபாத் கோட்டை, அநுமன் கோவில் ஆகிய இடங்களுக்கு செல்ல இருப்பதாகவும் கேட்டுக்கொண்டார்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Saturday, October 18, 2008

Holiday travel, Happy tour, Nepal tour

என் அக்கா (ஹேமா) என்னுடன் ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது, வாழ்கைல ஒரு முறையாவது இமயமலை சென்று வரனும்டான்னு சொல்லி ஒரு சின்ன தீய பற்ற வச்சிட்டாள். அவள் முக்கியமாக என்னிடம் பேசியது முனிவர்கள் வாழும் இமயமலை பற்றியது.அதிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று வரவேண்டுமென்ற ஆசை நீண்ட நாட்களாக எனக்குள் இருந்தது.

இந்து மதத்தின் வேத, இதிகாசங்களில் வடஇந்தியாவிலுள்ள பல இடங்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே வடஇந்தியா சென்று வரலாமென்ற யோசனை இருந்தது.

அக்கா வேலை அது-இது என்று விடுப்பு எடுக்க முடியாமல் பம்பரமா சுத்த ஆரம்பிச்சிட்டாள்!... பிறகு அதபத்தி பேச்சே எடுக்கல. இப்படி இருக்கும்பொழுது நண்பன் வினோத், ஒரு நாள் தொலைபேசியில் என்னிடம் வடஇந்தியா சுற்றுலா செல்ல இருப்பதாக தெரிவித்தான். அதனுடன் நீயும் வருகிறாயா என்று கேட்டுக்கொண்டான்.

நான் யோசிச்சிட்டு சொல்றதா சொல்லி, எதுக்கும் tour plan
அனுப்புடா பாத்துட்டு சொல்றேன்னு சொல்லி இருந்தேன்.

Tour Plan -ல் திருவேணி சங்கமம், அயோத்யா, ராமஜென்ம பூமி, புத்தர் பிறந்த லூம்ம்னி, மனக்கமானா தேவி கோவில், பசுபதிநாதர் கோவில், எவரஸ்ட் பயணம், புத்த கயா, காசி விஸ்வநாதர் கோவில், கங்கை நீராடல் என 12 நாள் சுற்றுலாவாக பட்டியல் நீண்டது. இது போதாதா, சரி நானும் வரன்டா... எவ்வளவு பணம் தேவைப்படும்னு கேட்டேன்.

Travellers-க்கு 9500 ரூபாய் மூன்று தவனையில் கொடுத்துட்டா, 12 நாள் சுற்றுலாவில் தங்குமிடம், சாப்பாடு , பயணம் செய்யும் பேருந்து என எல்லாம் அவஙகளே பாத்துக்குவாங்கன்னு சொன்னான்.

ஆஷான்னு சொல்லி கைய தூக்கிட்டேன். இது நடந்தது 2008 மே மாதம் இருக்கும் ஆனா நாங்க புறப்படபோறது செப்டம்பர் கடைசியிலதான்னு சொன்னாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு சொல்லி அப்பவே Office-ல permission வாங்கிட்டேன். சரியாக அக்டோபர் 24-ம் தேதி மதியம் 3.50மணிக்கு எங்கள் சுற்றுளா குழு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

பயணிப்போம்
கிருஷ்ண பிரபு,
சென்னை.