Monday, March 30, 2009

Way to Pashupatinath Temple - Kathmandu

விடிய காலையிலேயே எழுந்து கொண்டதால், புத்த நிலகந்தாவிலிருந்து அறைக்குத் திரும்பி ஒய்வு எடுத்துக் கொண்டோம். சாப்பிட்டுவிட்டு மூன்று இடங்களுக்கு செல்லும் வாய்ப்பினை டூர் கைடு எங்களுக்கு வழங்கினார்.

1)காத்மண்டு பசாருக்கு செல்வோர் அங்கு செல்லலாம்,
2) மீண்டும் பசுபதியை தரிசிக்கலாம் அல்லது
3)காத்மாண்டுவிலிருந்து சற்று விலகி இருக்கும் அரண்மனை ஒன்றிற்கு செல்லலாம்.

நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தார். வந்திருந்ததில் ஆறு பேர் அரண்மனையைப் பார்க்க சென்றனர். மூன்று பேர் பசுபதிநாத் தரிசனத்திற்கு சென்றிருந்தோம். பலரும் தேர்ந்தெடுத்தது பஜாருக்கு செல்வதைத்தான். ஏனெனில் பலரும் பசுபதியை காலையிலேயே தரிசித்துவிட்டனர். அரண்மனை யாரையும் கவரவில்லை.

நாங்கள் எவரஸ்ட் பயணம் சென்றிருந்ததால் காலையில் பசுபதியை தரிசிக்க இயலவில்லை. நாளை காலை சீக்கிரம் காத்மண்டுவை விட்டு கிளம்பும் படி இருந்ததால், இப்பொழுது பார்த்தால் தான் உண்டு. நாளை பார்பது என்பது இயலாத காரியம்.

கையில் இருந்த பைசாவிற்கு, அக்கா மகன் அகில், சார்லஸ் மற்றும் சிலருக்கு ருத்ராட்சம் வாங்கிக்கொண்டேன். ஒரு வழியாக வாங்க வேண்டியதை வாங்கி முடித்து பசுபதிநாத் கோவிலுக்கு செல்ல ஆயத்தமானோம். நாங்கள் கிளம்பியபோது சரியாக மாலை 6 மணி.

செல்லும் வழியில் மாலை குளிருக்கு, சிகரட் புகையை உள்ளே இழுத்து அலையலையாக வெளியேவிட்டு அழகு பார்க்கும் பதின்பருவத்திலிருந்த ஒருவன் யாருக்காகவோ காத்திருப்பது போல் தென்பட்டான். வழியில் செல்லும் பெண்களுக்கு விசில் அடித்து சம்பாஷனை செய்தபடியே இருந்தான். நாங்கள் தூரத்தில் செல்லும் வரை அந்தச் சப்தம் விட்டுவிட்டு கேட்டுக் கொண்டே இருந்தது.

சப்தம் அடங்கிய தொலைவில் எதிரே தீச்சுவாலை கண்ணில் பட்டது. அருகில் சென்று பார்த்தபோது தான் புரிந்தது அது தகன இடம் என்று. நேபாளில் தகனத்தை கோவிலின் அருகிலுள்ள படியிலேயே செய்கிறார்கள். "எண்டா உங்களுக்கு வேற வழியே தெரியலையா?" -என்று வினோத் அம்மாவிடம் சரியான திட்டு வாங்கினோம். இருள் தான் என்றாலும் ஒரு புகைப்படம் எடுத்தேன். "இத கூடவாடா போட்டோ எடுப்பிங்க? என்ன பசங்கலோன்னு" இன்னொரு திட்டு.

வசை வாங்கிக்கொண்டே கோவிலின் முகப்பை அடைந்தோம். செருப்பை கழட்டி விட இடம் இல்லாததால் ஒரு பூக்கடையில் விட்டு விட்டு சென்றோம். மொழிதெரியாத எங்களுக்கு இது போன்றதொரு சலுகையை பேசிப்பெற்றது ஆச்சர்யமே.

Friday, March 27, 2009

Budhanilkantha - kathmandu

போத்நாத் ஸ்தூபியிலிருந்து அறைக்குத் திரும்பினோம். அங்கிருந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, புத்த நிலகந்தாவிற்கு புறப்பட்டோம். போகும் வழியில் தான் நடிகை மனீஷா கொய்ராலாவின் வீடு இருக்கிறது என வண்டியில் ஏறும் போதே டூர் கைடு செல்லியிருந்தார். நடிகையின் வீடு வரும்போது அதைச் சுட்டிக்காட்டினார். அனைவரும் ஆவலுடன் பார்த்தோம். (நம்ம ஊரு காசுதானே இங்க மாளிகையா இருக்கு) உரிமையுடன் பார்த்தோம்.

சிறிது நேர பயணத்தில் கோவிலை அடைந்தோம். கோவிலுக்குப் பக்கத்தில் சிறுவர் பள்ளி இருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளிச் சீருடையில் நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை எனவே கேமராவை வெளியில் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதுபடியே நாங்களும் நடந்துகொண்டோம்.

ஒரு சிறிய குளத்தில் விஷ்ணு பாம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு இருப்பது போல் விக்ரஹம் இருந்தது. நுண்ணிய வேலைபாடுகளுடன் அழகாக இருந்தது. விஷ்ணு ஜலத்தில் படுத்த நிலையில் இருந்ததால் இதனை ஜல விஷ்ணு கோவில் என்று நம்மவர்கள் அழைக்கிறார்கள். வயதில் சிறியவர்கள் சிலைமீது நடந்து சென்று பூக்கள் வைக்க அனுமதிக்கப் படுகிறார்கள். சிலர் தச்சனைகளை அங்குள்ள குளத்திலும், விக்கிரத்தின் மீதும் இடுகிறார்கள்.

சிறிய கோவில் என்பதால் சீக்கிரமே தரிசனம் முடித்து வெளியில் வந்தோம். வரும் வழியில் கோவிலில் நேபாளிகள் இருவருக்கு எளிய முறையில் கல்யாணம் நடந்துகொண்டு இருந்தது. குழுவில் வந்திருந்த சிலர் அவர்களின் அருகில் சென்று வாழ்த்து தெரிவித்தார்கள். அங்கிருந்து புறப்படும் போது வினோத் என்னிடம் "கேமரா எங்கடா" என்று கேட்டன். "நீ என்கிட்ட கொடுக்கலையே, எங்கடா மிஸ் பண்ணன்னு" கேட்டேன். உடனே எங்கயோ தேடிப்போய் எடுத்துக்கொண்டு வந்தான்.. நல்ல வேலை அவன் வைத்த இடத்திலேயே இருந்தது. இல்லையெனில் நிறைய புகைப்படங்களை இழக்க நேரிட்டு இருக்கும்.

நல்ல வேலை கேமரா கிடைத்தது...இல்லையெனில் வினோத் என்னை கொலை செய்து போட்டு இருப்பான். பசுபதிநாத்திடம் மோச்சம் வாங்கி இருப்பேன்.

Thursday, March 26, 2009

Bodnath Stupa - kathmandu

ஸ்வயம்புநாத் மலைக் கோவிலிலிருந்து "போத்நாத் ஸ்தூபிக்கு" புறப்பட்டோம். செல்லும் வழியில் ஆளுயர தங்க நிற தியான புத்தசிலையைப் பார்த்தோம்.

தியான மண்டபம் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்தூபியாகும். இது திபெத்திய மற்றும் நேபாளிய புத்த மத நம்பிக்கையுடையவர்களுக்கு முக்கியமான புனிதத் தளமாக கருதப்படுகிறது. சம்பா சம்புத்தனை இங்கு பஞ்சபூதமாக கருதி இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இங்கு நாங்கள் சிறிது நேரமே இருந்ததால் கட்டிட அமைப்பு பற்றிய பூரண தகவல்களைப் பெற இயலவில்லை.

செல்லும் வழியெல்லாம் மஞ்சள், கருஞ்சிவப்பு, காவி மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்த பிக்குகள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். சில பிக்குகள் ஆங்காங்கு தியானித்துக்கொண்டு இருந்தனர். நம்போன்ற சுற்றுலா பயணிகள் விரும்பி புகைப்படம் எடுக்க அழைத்தால் புன்னகையுடன் வருகிறனர். புகைப்படம் எடுத்தவுடன் புன்னகையை உதிர்த்துவிட்டு சென்றுவிடுகின்றனர். போத்நாத் ஸ்தூபியை சுற்றிலும் பல கடைகள் இருக்கின்றன. எங்களிடம் நேபாள பணம் இல்லாததால் எதுவும் வாங்க இயலவில்லை.

ஒரு பெண் வழியில் உட்கார்ந்துகொண்டு அயல் நாட்டு பணத்திற்கு நேபாள நாணயம் கொடுத்துக்கொண்டு இருந்தால். INR 100 -க்கு நேபாள பணம் 140 தருவதாக சொல்லிக் கொண்டு இருந்தாள். உண்மையில் INR 100 -கான மதிப்பு நே.ப 160 ஆகும். நம்நாட்டில் இது போல பணத்தை மாற்றினால் கம்பி என்ன வேண்டியதுதான். அதுமட்டுமின்றி இதுபோன்ற தடையிலா நாணய மாற்றம் நாட்டின் பொருளாதாரத்திக்கே உலை வைக்கக்கூடியது என குரு மூர்த்தியின் கட்டுரையை படித்த ஞாபகம் வந்தது.

வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நானும் வினோத்தும் வழிதவறிவிட்டோம். எந்த பக்கம் போனாலும் வந்த வழி அடையாளமே தெரியவில்லை. எங்களைப் போலவே வழியை தவறவிட்ட, எங்களுடன் வந்த சக பயணிகளையும் எதிரில் பார்க்க நேர்ந்தது. அவர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஒரு வழியாக எங்களுடைய குழுவினரை கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். அவர்கள் கரகரவென பல்லைக்கடித்ததை சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

Wednesday, March 25, 2009

Swayambhunath Stupa - Kathmandu

காலையில் நாங்கள் எவரஸ்ட் பயணம் சென்றிருந்ததால், உடன் வந்திருந்தவர்கள் பசுபதிநாத் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வந்திருந்தார்கள். அவர்கள் "ஸ்வயம்புநாத்" கோவிலுக்கு செல்ல தயாராக இருத்தனர். நாங்களும் அவர்களுடன் இணைந்துகொண்டோம்.

5 -ஆம் நூற்றாண்டிலிருந்தே புகழ்பெற்ற புத்த ஸ்தலமாக விளங்கும் "ஸ்வயம்புநாத்" கோவில் ஊரைவிட்டு சற்று வெளியே பயணம் செய்து அடையும் தொலைவில் உள்ளது. கோவிலானது ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழி கூட சற்று குறுகலாகவே உள்ளது. சில பல படிகள் மேலே ஏறிப் போய்த்தான் தரிசனம் செய்ய வேண்டும். செல்லும் வழியில் நிறைய குரங்குகள் அங்குமிங்கும் அலைந்துகொண்டு இருக்கின்றன. சிலர் அவற்றிற்கு சாப்பிட ஏதாவது தருகிறார்கள். சில இடங்களில் படியானது செங்குத்தாக இருந்தால் உடன் வந்த சிலருக்கு மலை ஏறச் சிரமமாகத்தான் இருந்தது. இங்குள்ள பாதை முழுவதும் ஆங்காங்கு ருத்திராட்சம், ஸ்படிகம், புத்த சிலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன.

மேலே சென்றால், நான்கு திசைகளிலும் புத்தரின் முகம் தெரியுமாறு வடிவமைத்திருந்தார்கள். கோவிலில் சின்னச் சின்னச் சன்னதிகள் இருந்தன. அவற்றில் சில புத்தர் சிலைகளும், சில அம்மன் சிலைகளும் காட்டியளித்தன. பிறகு வெளியே வந்தால் கையால் உருட்டி விடும் பித்தளை வடிவ அமைப்பு வரிசையாக சுவற்றைச் சுற்றி பொருத்தி வைத்திருந்தனர். ஒருகால் இதுதான் புத்தரின் தர்மச்சக்கரமோ என்று கூட தோன்றியது. உருட்டாமல் போனால் தெய்வக்குத்தம் ஆகிவிடப்போகிறது என்று நாங்களும் அதை ஒவ்வொன்றாக உருட்டி விட்டு வந்தோம்.

ஏகப்பட்ட புத்தர் சிலைகளும், புத்த பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்களும் இங்கு விலைக்கு வாங்க கிடைக்கின்றன. பொதுவாக எனக்கு சுற்றுலா செல்லும் இடங்களில் எதுவும் வாங்கப் பிடிக்காது.ஆனால் புத்த இசைத் தொகுப்பும், திபெத் பற்றிய இயற்க்கை காட்சிகளடங்கிய வீடயோ தட்டையும், இதர சில இசைத் தட்டுக்களையும் வாங்கிக்கொண்டேன். ஆனால் நண்பன் வினோத் அவற்றை எடுத்துக்கொண்டு சென்றான். அவற்றில் சிலது வேலை செய்யவில்லை என்று சொல்லி இருந்தான்.

வாங்குவதை முடித்து, மலைமீதிருந்து காத்மண்டு நகரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். எங்கிருந்தோ டூர் கைடு(முழு சரக்கு வாசனை, பாக்கும் வாயில போட்டு கொழச்சிண்டே)காத்மாண்டுவின் ஜீரோ பாயின்ட்(வெள்ளை கலரில் உள்ள கூம்பு வடிவ கோபுரம்), நேபாள மகராஜாவின் அரண்மனை(சிறிது நாட்களில் அவரும் வீட்டிற்கு போகப் போகிறார், நேபாளில் மக்களாச்சி மலர்ந்துவிட்டது), சார்க் கட்டிடம்(SAARC Building) போன்ற பல முக்கிய கட்டிடங்களை சுட்டிக்காட்டினார். அனைத்தையும் பார்த்துவிட்டு ஒருவழியாக அனைவரும் கீழிறங்கி வந்தோம்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Friday, March 13, 2009

Flying to phokra valley - Nepal

போக்ராவை விட்டுப் புறப்படும் போது மறுபடியும் இங்கு வர வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். அதுபோலவே எவரஸ்ட்டை விட்டுப் புறப்படும் போதும் மறுபடியும் இங்கு வர வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

எவரஸ்ட்டிலிருந்து விமானம் போக்ராவிற்கு போகப்போவதாகவும் அங்குள்ள சில பயணிகளை சுமந்துகொண்டு மறுபடியும் காத்மண்டுவிற்கு போகப்போவதாகவும் பணிப் பெண் அறிவித்தாள். அதுபடியே விமானம் சுமார் 20 நிமிடங்கள் போக்ராவில் தரையிறங்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பறக்க தயாரானது.

உடன் வந்த பல பயணிகள் நேரடியாக காத்மாண்டுவிலிருந்து எவரஸ்ட் பயணத்தை மேற்கொண்டதால் போக்ராவிலுள்ள அன்னபூர்ணா சிகரத்தை ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பயணிகள் விமானத்திலிருந்து கீழிறங்கி விமான தளத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

சிறிது நேரத்தில் அனைவரையும் விமானத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். விமானம் காத்மண்டு நோக்கி புறப்படத் தயாரானது.

என்னுடைய இருக்கை கடைசி வரிசையில் இருந்தது. புதிதாக போக்ராவில் ஏறிய அமெரிக்கர் என் பக்கத்தில் அமர்ந்தார். அவருடைய மனைவி அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அமெரிக்கர் என்னிடம் "Where are you from?" என்று கேட்டார். சென்னை என்று பதில் சொன்னேன். திரு திருவென்று முழித்தார். பிறகு இந்தியா, டெல்லி, மும்பை என சென்னையின் பங்காளிகளை நினைவுபடுத்தி அதற்கு பக்கத்தில் என்று சொல்லி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகியது.

பிறகு எங்களுடைய எவரஸ்ட் பயணத்தை விளக்கி இதற்குத்தான் இங்கு வந்திருக்கிறோம் என்று சொன்னேன். மேலும் என்னுடைய ஜன்னலோர இருக்கையை அவருக்கு கொடுத்து வழியில் வந்த சிகரங்களை சுட்டிக் காட்டினேன். அவரும் ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அவருடைய மனைவியையும் சிகரத்தைப் பார்க்க அழைத்தார். இதற்கு மேல் அங்கு இருப்பது சரியில்லை என வினோத்தின் அம்மாவிற்கு பக்கத்தில் காலியாக இருந்த இருக்கைக்கு சென்றேன்.

சிறிது நேரத்தில் என்னை அழைத்த அவர் உங்களுடைய ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என என்னிடம் கூறினார். நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் நீங்களே உட்கார்ந்து கொள்ளுங்கள் என கூறினேன். என்னுடைய பதிலைக் கேட்டு அவரைவிட அவருடைய மனைவி மிகவும் சந்தோஷப் பட்டார்.

காத்மாண்டுவில் இறக்கி போகும் போது "Actually you helped me a lot to know beautiful things" என்று சொல்லி விட்டு சென்றார்.

இந்த பயணத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு சிறந்த விஷயம் என்னவெனில், விமானம் தளத்தைவிட்டுப் பறக்கும் போதும் சரி, தரையிறங்கும் போதும் சரி அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கைதட்டி விமானிக்கு மரியாதை செலுத்தினர். நமக்கு ஏன் இது போன்ற பழக்கம் வருவதில்லை என்று தெரியவில்லை!?.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.