Friday, May 8, 2009

Razcal to Gaya journey

03-10-2008: இன்றுதான் என் வாழ்வில் இரண்டாவது நாளாக நீண்ட நாள் பஸ் பயணம் அமையப் போகிறது என்று ரஸ்கலில் காலை பயணத்தைத் தொடங்கியபோது எனக்குத் தெரியாது. காலை 9 மணிக்குத் தொடங்கிய பஸ் பயணம் இரவு 7.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதில் ஆங்காங்கு பேருந்தை நிறுத்தி சிறுநீர் கழித்து, தேநீர் பருகி, மதிய உணவை சாப்பிட்டதோடு சரி. உருப்படியாக வேறு எதையும் செய்யவில்லை. பீஹாரின் தலைநகர் பாட்னாவை நெருங்கும் போதே வானம் இருட்டத் தொடங்கிவிட்டது. அங்கிருந்து கயாவிற்கு செல்வதற்குள் அந்திவானம் சாய்ந்து இருட்டிவிட்டது. ஆகவே குளித்து முடித்து காலையில் எழுந்து கயாவிற்குச் செல்ல வேண்டி உறங்கச்சென்றோம்.

காலை எழுந்து செல்ல வேண்டிய கயாவிற்கு ஒரு பெரிய கதையே இருக்கிறது.

முன்பொரு காலத்தில் அசுர குலத்தில் பிறந்த கயாசுரன் என்பவன் கடும் தவம் புரிந்தான். அவனுடைய கடும் தவத்தைக் கண்டு தேவர் குலமே நடுங்கியது. ராவணன் போல, ஹிரனிய காசிபன் போல ஒருவன் உதித்துவிட்டான் என அலறினார்கள். ஆகவே பிரம்மாவிடம் சென்று முறையிட்டார்கள்.

கயாசுரனால் ஒரு தீங்கும் நேராது. ஆகவே பயப்படாதீர்கள் என்று சொல்லிப் பார்த்தார் பிரம்மா. அதை அவர்கள் கேட்காததால் அவர்களை சிவபெருமானிடம் அழைத்துச் சென்றார்.

சிவபெருமானோ "என்னுடைய வேலையும் அவர்களுடைய வேலையும் ஒன்று. அதாவது அழித்தல், ஆகவே நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை" என்றார். அதனால் காக்கும் கடவுளான விஷ்ணுவைப் பாருங்கள் என்று கூறினார். தேவர்கள் சிவபெருமானையும் அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றனர்.

அனைத்தையும் கேட்ட விஷ்ணு கயாசுரனை அணுகி "என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றார்.

"தேவர்கள், ரிஷிகள், மந்திரங்கள், துறவிகள் இவர்களைக் காட்டிலும் எனது உடல் புனிதமாகவேண்டும். என்னைத் தொடுபவர்களுக்கும் புனிதம் ஏற்பட வேண்டும்" என்று வரம் கேட்டான்.

அடடா... இவ்வளவுதானா! என்று தேவர்கள் சுதாரித்தனர்.

கயாசுரனின் வரம் ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. தீங்கு செந்த அனைவரும் அவனிடம் சென்று புனிதமானதால் சொர்க்கத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. நரகமே சூன்யமானது. யமதர்மனின் நாற்காலி ஆட்டம் கண்டது.

"நரகத்தைக் கலைத்துவிடலாம். ஆனால் அப்படி ஒரு இடம் இருப்பதால் தானே தீங்கு செய்ய மக்கள் பயப்படுகின்றனர். கயாசுரனின் வரத்தால் மக்கள் அனைவரும் பயமின்றி தீங்கு செய்துவிட்டு அவனிடம் சென்று புனிதமாகின்றனர். எனவே நல்லவர்கள் கூட வழிமாறிவிடுகின்றனர். இது சகிக்க முடியாததாக இருக்கின்றது. இதற்காக ஏதாவது செய்யவேண்டும்" என்று பிரம்மாவிடம் சென்று முறையிட்டான்.

பிரம்மா, யமனை அழைத்துக் கொண்டு வரமளித்த விஷ்ணுவிடம் சென்றார்.

விஷ்ணு இதற்கு ஒரு வழி கண்டுபிடித்து கயாசுரனிடம் சென்றார். ஒரு புனித யாகம் நடத்த இருக்கிறேன். அதற்கு உன்னுடைய உதவி வேண்டும் என்று கூறினார்.

"என்ன வேண்டுமென ஆணையிடுங்கள்" என்று கயாசுரன் பக்தியுடன் கூறினான்.

"யாகம் செய்ய உன்னுடைய உடலை தானமாகக் கொடு" என்று விஷ்ணு கூறினார்.

ஒரு நல்ல காரியத்திற்கு என்னுடைய உடல் பயன்படுமெனில் அதைவிட வேறு மகிழ்ச்சி இல்லை என்று தன்னுடைய உடலைத் தரையில் கிடத்தினான் கயாசுரன். அவன் அப்படி தரையில் படுத்த இடம் மகத நாட்டைச் சேர்ந்த சம்பா காரன்யம் என்ற இடம். அந்த அழகிய பர்வதத்தில் நடந்த யாகத்தில் கோடானு கோடி தேவர்களும் கலந்து கொண்டார்கள்.

யாகம் தொடங்கியது, ஆனால் அவனுடைய உடல் ஆடியது. பிரம்மாவின் கட்டளையின் படி யமதர்மன் ஒரு பெரிய மலையை எடுத்து அவனுடைய தலையின் மீது வைத்தான். அப்பொழுதும் அவனுடைய உடலசைவு நின்றபடி இல்லை. விஷ்ணுவிடம் பிரம்மா முறையிட்டார். விஷ்ணு தன்னுடைய மூன்று வடிவங்களான ஜனார்த்தனர், புண்டரீகர், கதாதர் ஆகியவற்றை வைக்கச் சொன்னார். பிரம்மா ஐந்து வடிவமெடுத்து அவற்றை வைத்தார். ஆனாலும் உடலசைவு நின்றபடி இல்லை.

விநாயகரும், சூரியனும் அமர்ந்தார்கள், லக்ஷ்மியும் கௌரி மங்கலாவும் அமர்ந்தார்கள், காயத்ரியும் பார்வதியும் அமர்ந்தார்கள் எதற்கும் உடலசைவு நிற்கவில்லை. ஆடிக்கொண்டே இருந்தது. கடைசியில் விஷ்ணு தனது கதையை வைத்தார். அப்பொழுதுதான் உடல் அடங்கியது.

"வைகுண்ட நாதனின் ஒரு வார்த்தையால் எனது உடல் அடங்கி இருக்கும். அவருடைய கதையால் என்னுடைய உடல் அடங்கியது எனது பாக்கியம். உயிர் அடங்கினாலும் உடல் அடங்க இறைவனின் சித்தம் வேண்டும்" என்று கயாசுரன் பக்தியுடன் சொன்னான். இவனுடைய இனிய மொழிகளைக் கண்ட தேவர்கள் அவனுக்கு வரங்கள் அளிக்க முன்வந்தனர்.

அதற்கு அவன் "சூரியனும் சந்திரனும் நட்சத்ரங்களும் பூவுலகும் இருக்கும் வரை எல்லாத் தெய்வங்களும் என்னுள் இங்கு உறைய வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரத்தம் செய்பவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் பிரம்மா யோகம் சித்திக்க வேண்டும். அவர்கள் எல்லா வகைப் பாவங்களும் நீங்கி புண்ணியம் அடைய வேண்டும்." என்று வரம் கேட்டான்.

உலக உயிர்களின் மீது இப்படி ஒரு நல்ல என்னமா என்று தேவர்கள் அனைவரும் வியந்தனர். அந்த வரத்தை தருவதாக வாழ்த்தினர். கயாசுரனும் மகிழ்ந்தான்.

ராமாயணத்தில் நிரஞ்சனா என்றும் தற்போது ஃபால்கு என்றும் அழைக்கப்படும் நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு நாளை பயணமாகப் போகிறோம்.

Tuesday, April 21, 2009

Nepal to India - Razcal journey

02-10-2008: வினோத்தின் அம்மாவும் நானும் எப்பொழுதுமே காலையில் சீக்கிரமாக தயாராகி விடுவோம். வினோத் கடைசி நிமிடத்தில் தான் தயாராவான். வினோத்தின் அத்தை சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து எங்காவது தெரிந்தவர்களின் அறைகளுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் வரும் போது குளித்து முடித்து தயாராக இருப்பார்கள்.

நான் சற்றே அறையை விட்டு வெளியில் வந்து என்னுடைய குழுவினர் எதிர்படுகிறார்களா என்று நோட்டம்விட்டேன். பள்ளிச் சிறுவர்களில் சிலர் தூக்கக் கலக்கத்துடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பெரிய வகுப்பு மாணவர்கள் சிறிய வகுப்பு மாணவர்களை தாதாக்களைப் போல் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்கள். ஒரு அறையின் முன்பு சில மாணவர்களும், ஆசிரியர்களும் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். எவ்வளவு தட்டியும் உள்ளிருந்து யாருமே கதவைத் திறக்கவில்லை. நீண்ட முயற்சிக்குப் பின்பு இரண்டாவது படிக்கும் நான்கு மாணவர்கள் கண்களைக் கசக்கிக் கொண்டு கதவைத் திறந்தார்கள்.

"இவங்கள யாருடீ தனியாவிட்டது" -ன்னு ஒரு ஆசிரியை சக ஊழியரிடம் குறை பட்டுக் கொண்டார்.

நான் அவர்களுக்கு புன்னகை செய்துவிட்டு அறைக்குத் திரும்பி உடைமைகளை தயார் செய்வதில் துரிதமானேன். சிறிது நேரத்தில் டூர் மேனேஜர் எல்லோருடைய அறை வாசல்களிலும் வந்து தயாராக இருக்கும் படி சொல்லிவிட்டுச்சென்றார்.

காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து இந்தியாவிலுள்ள ரஸ்கலுக்குப் புறப்பட தயாரானோம். எனக்கு காத்மண்டு சென்னையைப் போல் தான் தோன்றியது. வெயில் கூட சற்று அதிகம் என்றே சொல்லுவேன்.

எங்கள் விடுதியை விட்டு பத்து நிமிடப் பயணம் செய்திருந்தோம். சென்னையில் உள்ளது போல் வாகன நெரிசலை சந்திக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே மலையில் செல்லும் பயணம் வாகன வேகத்தை மட்டுப்படுத்தியிருந்தது. இதில் வாகன நெரிசல் வேறு எரிச்சல் படுத்தியது.

வண்டி மிகவும் குறைவான வேகத்தில் சென்றதால் நாங்கள் வண்டியை விட்டு கீழிறங்கி நடந்து சென்றோம். வண்டியில் உள்ள பெரியவர்கள் எங்களைக் கோபிக்கவே நாங்கள் மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம்.

ஒரு இடத்தில் வண்டிகள் நின்று நின்று சென்றுகொண்டிருந்தன. இரு சக்கர வாகனத்தில் சென்ற புதிதாக மணமுடித்த தம்பதிகள் லாரி மோதி இறந்திருந்தார்கள். அந்த விபத்து நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது. அதனால் தான் வழி நெடுகவும் வாகன நெரிசலை சந்திக்க நேர்ந்தது. ஐயோ... இது தெரியாமல் குறைபட்டுக் கொண்டோமே என்று வருத்தமாக இருந்தது.

அதற்கு மேல் வண்டி வேகம் எடுத்தது. மதியம் எதோ ஒரு ஊரில் நிறுத்தினார்கள். அங்கு காஞ்சி மடம் பஜனைக்கான மண்டபம் கட்டிக் கொடுத்திருந்தார்கள். திருவிழா சமயம் என்பதால் கூட்டம் வேறு நடந்துகொண்டிருந்தது. தண்ணீர் வசதியெல்லாம் கூட இருந்தது. சரி இங்கேயே போஜனம் முடித்துப் புறப்படலாம் என்றால் அவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

சாலைக்குப் பக்கத்திலிருந்த குட்டிச்சுவரில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கிளம்பினோம். சில மணிநேரம் பயணம் செய்து இந்திய எல்லையை அடைந்தோம். பார்க்குமிடமெல்லாம் ஏழ்மை தாண்டவமாடுகிறது. சாலையோரங்களில் பெயரளவிற்குக் கூட சுத்தம் இல்லை. இன்னும் கூட அவர்களின் வாழ்கைத் தரம் உயரவில்லை.

வழிநெடுக இது போன்ற காட்சிகளையே பார்த்துக் கொண்டு நாங்கள் தங்க வேண்டிய பயணியர் விடுதிக்கு இரவு 8 மணிக்குச் சென்றோம். பிறகு சமைத்து எங்களுக்கு இரவு சமையல் படைத்தார்கள். எங்கள் யாருக்குமே தங்கும் விடுதி பிடிக்கவில்லை.

நாங்கள் தங்கிய அறையில் ஒரு வெளிநாட்டவரும் தங்கியிருந்தார். அவர் எங்களுக்கு முன்பே அங்கு தங்கியிருந்தார். எங்களுடன் வந்த குட்டிக் குழந்தை காவ்யாவின் பாட்டி சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். வெளிநாட்டவருக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எங்களிடம் வந்து சத்தம் போடாமல் பேசுங்கள் நான் நாளை காலை சீக்கிரம் புறப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். தவறாக நினைத்த பாட்டி அவரை சண்டைக்கு இழுத்தார்கள். அவரும் ஏதேதோ திட்டினார். இருவருக்குமிடையே வாக்கு வாதம் முற்றியது.

வினோத்தின் அம்மா தலையிட்டு "வெளிநாட்டவர் நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்" என்று பாட்டியை சமாதானப்படுத்தினார். காலையில் புத்த காயாவிற்குப் புறப்பட வேண்டுமென்பதால் அனைவரும் உறங்கச்சென்றோம்.

Monday, April 6, 2009

Bye Bye to Kathmandu

அறைக்குத் திரும்பி கேமராவை எடுத்துக் கொண்டு மறுபடியும் வெளியில் நான் மட்டும் கிளம்பினேன். வினோத் தான் வரவில்லை என்று படுத்துக் கொண்டான்.

மறுபடியும் படித்துறைக்கு ஓடினேன். சரியாக நான் அங்கு செல்லவும் நிகழ்ச்சி முடியவும் சரியாக இருந்தது. வழியில் எதிர்பட்ட ஒருவனிடம் பேச்சுக் கொடுத்தேன். அவனது பெயர் ராகவன் என்று சொன்னான். இந்திய ஆணுக்கும், நேபாளி பெண்ணுக்கும் பிறந்தவன் என்று சொல்லிக்கொண்டான். MSC Physics final year படித்துக்கொண்டு இருந்ததாகச் சொன்னான். அவனுடைய தம்பியும் உடனிருந்தான். 12th படிக்கிறானாம்.

மேலும் என்னைப் பற்றி விசாரித்தான். நான் கடந்து வந்த பாதையையும், இனி செல்ல இருக்கும் இடங்களையும் பற்றி விவரித்தேன். பெயர் என்னவென்று கேட்டான். என் பெயர் கிருஷ்ண பிரபு, நண்பர்கள் கிச்சா என்று கூப்பிடுவார்கள் என்று சொன்னேன். What kitcha? You know one thing, the word Kitcha's meaning is dog in Nepali language.... என்று சொன்னான். ஆஹா! ஊரு விட்டு ஊரு வந்தது இதுக்குத்தானா? என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

மன்னராச்சி விலகி ஜனநாயக ஆட்சி வருவதைப் பற்றி வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தான். பனி பொழிந்தாலும், சுற்றி தகனம் நடந்ததால் சற்று குளிர் காய முடிந்தது.

எவ்வளவு நல்ல கலாச்சாரம். எங்களூரில் இதுபோல் கோவிலின் படித்துறையில் தகனம் செய்ய இயலாது என தென்னிந்திய கலாச்சாரத்தைப் பற்றி கூறினேன். எங்கிருந்து எங்கு வந்து இதையெல்லாம் ரசிக்கிறீர்கள்!. இங்கிருப்பவர்களுக்கு இதனுடைய மகிமை தெரிவதில்லை என குறை பட்டுக்கொண்டான்.

எங்களுடைய சம்பாஷனை முடிந்ததும் புறப்படத் தயாரானேன். திரும்பும் வழி இருட்டாக இருந்ததால் திசை தெரியாமல் முழித்தேன். என்னுடைய ஹோட்டலுக்கு எப்படி போக வேண்டுமென்று கேட்டேன். அந்த வழியில் தான் நாங்களும் போக வேண்டும் கூட வாருங்கள் என்று என்னையும் அழைத்துக் கொண்டான். விடுதி நெருங்கியதும் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

நீண்ட நேரம் அவர்களுடைய கலாச்சாரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தேன். எல்லா இடங்களிலும் மேற்கத்திய கலாச்சாரம் தான் சிறந்தது என்ற மாயை எப்படித்தான் நுழைந்ததோ தெரியவில்லை!... அப்படி நுழைந்த இடங்களில் காத்மாண்டுவும் ஒன்று. இந்தி நடிகர், நடிகைகளுக்கு நேபாளி மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல இடங்களில் இந்திப் பட பாடல்கள் ரம்யமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

விடுதிக்குத் திரும்பினால் சென்னை, மயிலாப்பூரிலுள்ள ஒரு பள்ளியிலிருந்து சுமார் 50 மாணவர்கள் எங்களுடைய விடுதியில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டு இருந்தார்கள். பள்ளிச் சுற்றுலாவிற்கு வந்துள்ளார்களாம். காத்மண்டில் இரவு தங்கி அங்கிருந்து போக்ரா, கேங்டாக் என சில இடங்களுக்கும் செல்ல இருப்பதாக கூறினார்கள். என்னுடைய எவரஸ்ட் பயண வீடியோவை அவர்களுக்கு காட்டினேன். மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

மறுநாள் காத்மண்டுவை விட்டு இந்தியாவிற்கு வர வேண்டும். எனவே வாங்கிய பொருட்கள் அனைத்தையும் பார்சல் செய்து பைகளில் வைத்தோம். அனைத்தையும் சரி பார்த்த பிறகு, இரவு உணவு முடித்துக் கொண்டு உறங்கச் சென்றோம்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Friday, April 3, 2009

Pashupatinath Temple - Kathmandu

கோவிலின் முகப்பிலே நூறுக்கும் குறையாத லிங்கங்கள் இருக்கின்றன. அதைச்சுற்றியும் செல்லலாம், தவிர்த்துவிட்டும் கோவிலுக்குள் செல்லலாம். அவையனைத்தையும் சுற்றுவதற்கு ஏற்றாற்போல் வழியும் சுற்றி சுற்றி வந்தது. ஒருவழியாக பாதை முடியும் இடத்தில் ஒரு ஆசாமி ருத்ராட்சத்துடன் நின்றுகொண்டிருந்தான். அதையெல்லாம் வாங்காதே என்று வினோதின் அம்மா ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்திருந்தார்கள். சரியென்று நானும் அவரைப் பார்த்தும் பார்க்காதது போல் சென்றுவிட்டேன். எங்கள் தலை மறையும் வரை ஏதேதோ சொல்லி எங்களை வாங்கச்சொல்லி கேட்டுக்கொண்டார். தப்பித்தால் போதுமென்று வேகமாக ஓடி மறைந்தோம்.

சிவனுக்கு கைலாயத்தைத் தவிர்த்து நான்கு முக்கியமான இடங்கள் இருக்கின்றன. அவை 1.தெற்கே இராமநாதர் (தமிழ்நாடு), 2.கிழக்கே விசுவநாதர் (உ.பி), 3.மேற்க்கே சோம்நாத் (குஜராத்) மற்றும் 4.வடக்கே பசுபதிநாத் (நேபாள்).

பசுபதிநாத் கோவில் அண்டை நாடான நேபாளின் தலை நகர் காத்மாண்டுவில் இருப்பதால் இது சிவா பூமியாகக் கருதப்படுகிறது. மலை மகள் இங்கு தவம் செய்ததாகவும், கங்கையே இங்கு பாய்ந்து இடத்தை வளப்படுத்துவதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

சிவசக்தி இங்கு வீற்றிருப்பதால் சிவராத்திரி இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியன்று இந்தியாவிலிருந்து கூட பக்தர்கள் சென்று தரிசிப்பதாக கேள்விப்பட்டேன்.சிவனுடைய வாகனமான நந்திக்கு இங்கு சிறப்பான பூஜை செய்வதாகவும், முக்கியத்துவம் தருவதாகவும் கேள்விப்பட்டேன்.

சரியாக கடைசி பூஜை நடக்கும் போது நாங்கள் சென்றோம். பத்து நிமிட பூஜை முடிந்தவுடன் கற்பகிரத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ என்று நினைத்துக்கொண்டேன். சிறிதளவு பிரசாதம் கொடுத்தார்கள் வாங்கி நெற்றியில் வைத்துக் கொண்டேன்.கோவிலுள் சின்னச்சின்ன விக்ரகங்கள் இருக்கின்றன. அனைத்தையும் பார்த்துவிட்டு பைரவரிடம் சென்றோம். ஆளுயர கால பைரவரின் உருவம் வழிபட இருந்தது. இதுவரை நான் பார்த்த பைரவரின் விக்ரகங்களில் இதுதான் பெரியது.

கோவிலுக்குல் புகைப்படன் எடுக்க அனுமதி இல்லாததால் எதையும் புகைப்படம் எடுக்க இயலவில்லை. கோவிலை ஒட்டிய பகுதியில் பாக்மதி ஆற்றினை பார்க்கும்படி மேடை ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. நாங்கள் சென்ற பொழுது கரையை ஒட்டிய படித்துறையில் சடலங்கள் தீயிளிடப்பட்டடு எரிந்து கொண்டிருந்தன. மணி 7.30 P.M இருக்கும் அதற்குள் கோவிலை முக்கால் வாசி மூடிவிட்டார்கள் 8 மணிக்குள்(P.M) முழுவதுமாக மூடி விடுவார்களாம்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய ஒரு விழ எடுத்திருந்தார்கள். அந்த விழாவில் பாடும் பஜனைப் பாடலுக்கு சன்யாசிகள் முதல் சம்சாரிகள் வரை கையில் தீபம் வைத்துக் கொண்டு ஆடினார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி, மகள், பேத்தி ஆகிய மூவரும் தாளக்கட்டிற்கு ஏற்றபடி ஆடியது அழகாக இருந்தது. பாக்மதி நதிக்கு ஆரத்தியும் எடுத்தார்கள். பார்ப்பதற்கு நாம் கங்கைக்கு செய்யும் ஆராதனையைப் போல் இருந்தது. அந்த ஆராதனையை அருகில் காண படித்துறைக்குச் சென்றோம்.

படித்துறைக்குச் சென்றதால் நாங்கள் காலணிகளை விட்ட இடம் மறந்து போனது. எந்தப் பக்கம் போவது என்றே தெரியவில்லை. வழியில் விசாரித்துக் கொண்டே போனோம். ஒரு கடையில் இருந்த நேபாளி, "நீங்கள் தமிழர்களா?" என்று கேட்டன். இவனுக்கு எப்படி தமிழ் தெரிந்தது என்று ஆச்சர்யமாக இருந்தது. விசாரித்ததில் எங்கள் ஊரின் பக்கத்திலுள்ள ஒரு கல்லூரியில் இரண்டு வருடம் ஹாஸ்டல் செக்யூரிட்டியாக வேலை செய்திருக்கிறான்.

ஒரு முக ருத்ராடம், பல முக ருத்ராட்சம் போன்றவற்றை ரூபாய் 200 -லிருந்து ரூபாய் 500-க்குள் வாங்கித் தருவதாகச் சொன்னான். அதுபடியே வினோதின் மாமாவிற்காக ரூபாய் 250-ற்கு ஒரு முக ருத்ராட்சம் ஒன்று வாங்கித் தந்தான். பிறகு கோவிலின் முகப்பில் நாங்கள் காலணிகளை விட்ட இடத்திற்கு வழி காட்டினான்.

நாங்கள் திரும்பிய நேரத்தில் அனைத்து கடைகளும் மூடி இருந்தது. "அய்யோ செருப்பு போச்சான்னு நெனச்சி ஒவ்வொரு கடையின் முன்பும் தேடினோம்". பிறகு வினோத் தான் எங்களுடைய செருப்பை கண்டு எடுத்து வந்தான்.

Monday, March 30, 2009

Way to Pashupatinath Temple - Kathmandu

விடிய காலையிலேயே எழுந்து கொண்டதால், புத்த நிலகந்தாவிலிருந்து அறைக்குத் திரும்பி ஒய்வு எடுத்துக் கொண்டோம். சாப்பிட்டுவிட்டு மூன்று இடங்களுக்கு செல்லும் வாய்ப்பினை டூர் கைடு எங்களுக்கு வழங்கினார்.

1)காத்மண்டு பசாருக்கு செல்வோர் அங்கு செல்லலாம்,
2) மீண்டும் பசுபதியை தரிசிக்கலாம் அல்லது
3)காத்மாண்டுவிலிருந்து சற்று விலகி இருக்கும் அரண்மனை ஒன்றிற்கு செல்லலாம்.

நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தார். வந்திருந்ததில் ஆறு பேர் அரண்மனையைப் பார்க்க சென்றனர். மூன்று பேர் பசுபதிநாத் தரிசனத்திற்கு சென்றிருந்தோம். பலரும் தேர்ந்தெடுத்தது பஜாருக்கு செல்வதைத்தான். ஏனெனில் பலரும் பசுபதியை காலையிலேயே தரிசித்துவிட்டனர். அரண்மனை யாரையும் கவரவில்லை.

நாங்கள் எவரஸ்ட் பயணம் சென்றிருந்ததால் காலையில் பசுபதியை தரிசிக்க இயலவில்லை. நாளை காலை சீக்கிரம் காத்மண்டுவை விட்டு கிளம்பும் படி இருந்ததால், இப்பொழுது பார்த்தால் தான் உண்டு. நாளை பார்பது என்பது இயலாத காரியம்.

கையில் இருந்த பைசாவிற்கு, அக்கா மகன் அகில், சார்லஸ் மற்றும் சிலருக்கு ருத்ராட்சம் வாங்கிக்கொண்டேன். ஒரு வழியாக வாங்க வேண்டியதை வாங்கி முடித்து பசுபதிநாத் கோவிலுக்கு செல்ல ஆயத்தமானோம். நாங்கள் கிளம்பியபோது சரியாக மாலை 6 மணி.

செல்லும் வழியில் மாலை குளிருக்கு, சிகரட் புகையை உள்ளே இழுத்து அலையலையாக வெளியேவிட்டு அழகு பார்க்கும் பதின்பருவத்திலிருந்த ஒருவன் யாருக்காகவோ காத்திருப்பது போல் தென்பட்டான். வழியில் செல்லும் பெண்களுக்கு விசில் அடித்து சம்பாஷனை செய்தபடியே இருந்தான். நாங்கள் தூரத்தில் செல்லும் வரை அந்தச் சப்தம் விட்டுவிட்டு கேட்டுக் கொண்டே இருந்தது.

சப்தம் அடங்கிய தொலைவில் எதிரே தீச்சுவாலை கண்ணில் பட்டது. அருகில் சென்று பார்த்தபோது தான் புரிந்தது அது தகன இடம் என்று. நேபாளில் தகனத்தை கோவிலின் அருகிலுள்ள படியிலேயே செய்கிறார்கள். "எண்டா உங்களுக்கு வேற வழியே தெரியலையா?" -என்று வினோத் அம்மாவிடம் சரியான திட்டு வாங்கினோம். இருள் தான் என்றாலும் ஒரு புகைப்படம் எடுத்தேன். "இத கூடவாடா போட்டோ எடுப்பிங்க? என்ன பசங்கலோன்னு" இன்னொரு திட்டு.

வசை வாங்கிக்கொண்டே கோவிலின் முகப்பை அடைந்தோம். செருப்பை கழட்டி விட இடம் இல்லாததால் ஒரு பூக்கடையில் விட்டு விட்டு சென்றோம். மொழிதெரியாத எங்களுக்கு இது போன்றதொரு சலுகையை பேசிப்பெற்றது ஆச்சர்யமே.

Friday, March 27, 2009

Budhanilkantha - kathmandu

போத்நாத் ஸ்தூபியிலிருந்து அறைக்குத் திரும்பினோம். அங்கிருந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, புத்த நிலகந்தாவிற்கு புறப்பட்டோம். போகும் வழியில் தான் நடிகை மனீஷா கொய்ராலாவின் வீடு இருக்கிறது என வண்டியில் ஏறும் போதே டூர் கைடு செல்லியிருந்தார். நடிகையின் வீடு வரும்போது அதைச் சுட்டிக்காட்டினார். அனைவரும் ஆவலுடன் பார்த்தோம். (நம்ம ஊரு காசுதானே இங்க மாளிகையா இருக்கு) உரிமையுடன் பார்த்தோம்.

சிறிது நேர பயணத்தில் கோவிலை அடைந்தோம். கோவிலுக்குப் பக்கத்தில் சிறுவர் பள்ளி இருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளிச் சீருடையில் நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை எனவே கேமராவை வெளியில் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதுபடியே நாங்களும் நடந்துகொண்டோம்.

ஒரு சிறிய குளத்தில் விஷ்ணு பாம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு இருப்பது போல் விக்ரஹம் இருந்தது. நுண்ணிய வேலைபாடுகளுடன் அழகாக இருந்தது. விஷ்ணு ஜலத்தில் படுத்த நிலையில் இருந்ததால் இதனை ஜல விஷ்ணு கோவில் என்று நம்மவர்கள் அழைக்கிறார்கள். வயதில் சிறியவர்கள் சிலைமீது நடந்து சென்று பூக்கள் வைக்க அனுமதிக்கப் படுகிறார்கள். சிலர் தச்சனைகளை அங்குள்ள குளத்திலும், விக்கிரத்தின் மீதும் இடுகிறார்கள்.

சிறிய கோவில் என்பதால் சீக்கிரமே தரிசனம் முடித்து வெளியில் வந்தோம். வரும் வழியில் கோவிலில் நேபாளிகள் இருவருக்கு எளிய முறையில் கல்யாணம் நடந்துகொண்டு இருந்தது. குழுவில் வந்திருந்த சிலர் அவர்களின் அருகில் சென்று வாழ்த்து தெரிவித்தார்கள். அங்கிருந்து புறப்படும் போது வினோத் என்னிடம் "கேமரா எங்கடா" என்று கேட்டன். "நீ என்கிட்ட கொடுக்கலையே, எங்கடா மிஸ் பண்ணன்னு" கேட்டேன். உடனே எங்கயோ தேடிப்போய் எடுத்துக்கொண்டு வந்தான்.. நல்ல வேலை அவன் வைத்த இடத்திலேயே இருந்தது. இல்லையெனில் நிறைய புகைப்படங்களை இழக்க நேரிட்டு இருக்கும்.

நல்ல வேலை கேமரா கிடைத்தது...இல்லையெனில் வினோத் என்னை கொலை செய்து போட்டு இருப்பான். பசுபதிநாத்திடம் மோச்சம் வாங்கி இருப்பேன்.

Thursday, March 26, 2009

Bodnath Stupa - kathmandu

ஸ்வயம்புநாத் மலைக் கோவிலிலிருந்து "போத்நாத் ஸ்தூபிக்கு" புறப்பட்டோம். செல்லும் வழியில் ஆளுயர தங்க நிற தியான புத்தசிலையைப் பார்த்தோம்.

தியான மண்டபம் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்தூபியாகும். இது திபெத்திய மற்றும் நேபாளிய புத்த மத நம்பிக்கையுடையவர்களுக்கு முக்கியமான புனிதத் தளமாக கருதப்படுகிறது. சம்பா சம்புத்தனை இங்கு பஞ்சபூதமாக கருதி இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இங்கு நாங்கள் சிறிது நேரமே இருந்ததால் கட்டிட அமைப்பு பற்றிய பூரண தகவல்களைப் பெற இயலவில்லை.

செல்லும் வழியெல்லாம் மஞ்சள், கருஞ்சிவப்பு, காவி மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்த பிக்குகள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். சில பிக்குகள் ஆங்காங்கு தியானித்துக்கொண்டு இருந்தனர். நம்போன்ற சுற்றுலா பயணிகள் விரும்பி புகைப்படம் எடுக்க அழைத்தால் புன்னகையுடன் வருகிறனர். புகைப்படம் எடுத்தவுடன் புன்னகையை உதிர்த்துவிட்டு சென்றுவிடுகின்றனர். போத்நாத் ஸ்தூபியை சுற்றிலும் பல கடைகள் இருக்கின்றன. எங்களிடம் நேபாள பணம் இல்லாததால் எதுவும் வாங்க இயலவில்லை.

ஒரு பெண் வழியில் உட்கார்ந்துகொண்டு அயல் நாட்டு பணத்திற்கு நேபாள நாணயம் கொடுத்துக்கொண்டு இருந்தால். INR 100 -க்கு நேபாள பணம் 140 தருவதாக சொல்லிக் கொண்டு இருந்தாள். உண்மையில் INR 100 -கான மதிப்பு நே.ப 160 ஆகும். நம்நாட்டில் இது போல பணத்தை மாற்றினால் கம்பி என்ன வேண்டியதுதான். அதுமட்டுமின்றி இதுபோன்ற தடையிலா நாணய மாற்றம் நாட்டின் பொருளாதாரத்திக்கே உலை வைக்கக்கூடியது என குரு மூர்த்தியின் கட்டுரையை படித்த ஞாபகம் வந்தது.

வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நானும் வினோத்தும் வழிதவறிவிட்டோம். எந்த பக்கம் போனாலும் வந்த வழி அடையாளமே தெரியவில்லை. எங்களைப் போலவே வழியை தவறவிட்ட, எங்களுடன் வந்த சக பயணிகளையும் எதிரில் பார்க்க நேர்ந்தது. அவர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஒரு வழியாக எங்களுடைய குழுவினரை கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். அவர்கள் கரகரவென பல்லைக்கடித்ததை சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

Wednesday, March 25, 2009

Swayambhunath Stupa - Kathmandu

காலையில் நாங்கள் எவரஸ்ட் பயணம் சென்றிருந்ததால், உடன் வந்திருந்தவர்கள் பசுபதிநாத் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வந்திருந்தார்கள். அவர்கள் "ஸ்வயம்புநாத்" கோவிலுக்கு செல்ல தயாராக இருத்தனர். நாங்களும் அவர்களுடன் இணைந்துகொண்டோம்.

5 -ஆம் நூற்றாண்டிலிருந்தே புகழ்பெற்ற புத்த ஸ்தலமாக விளங்கும் "ஸ்வயம்புநாத்" கோவில் ஊரைவிட்டு சற்று வெளியே பயணம் செய்து அடையும் தொலைவில் உள்ளது. கோவிலானது ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழி கூட சற்று குறுகலாகவே உள்ளது. சில பல படிகள் மேலே ஏறிப் போய்த்தான் தரிசனம் செய்ய வேண்டும். செல்லும் வழியில் நிறைய குரங்குகள் அங்குமிங்கும் அலைந்துகொண்டு இருக்கின்றன. சிலர் அவற்றிற்கு சாப்பிட ஏதாவது தருகிறார்கள். சில இடங்களில் படியானது செங்குத்தாக இருந்தால் உடன் வந்த சிலருக்கு மலை ஏறச் சிரமமாகத்தான் இருந்தது. இங்குள்ள பாதை முழுவதும் ஆங்காங்கு ருத்திராட்சம், ஸ்படிகம், புத்த சிலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன.

மேலே சென்றால், நான்கு திசைகளிலும் புத்தரின் முகம் தெரியுமாறு வடிவமைத்திருந்தார்கள். கோவிலில் சின்னச் சின்னச் சன்னதிகள் இருந்தன. அவற்றில் சில புத்தர் சிலைகளும், சில அம்மன் சிலைகளும் காட்டியளித்தன. பிறகு வெளியே வந்தால் கையால் உருட்டி விடும் பித்தளை வடிவ அமைப்பு வரிசையாக சுவற்றைச் சுற்றி பொருத்தி வைத்திருந்தனர். ஒருகால் இதுதான் புத்தரின் தர்மச்சக்கரமோ என்று கூட தோன்றியது. உருட்டாமல் போனால் தெய்வக்குத்தம் ஆகிவிடப்போகிறது என்று நாங்களும் அதை ஒவ்வொன்றாக உருட்டி விட்டு வந்தோம்.

ஏகப்பட்ட புத்தர் சிலைகளும், புத்த பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்களும் இங்கு விலைக்கு வாங்க கிடைக்கின்றன. பொதுவாக எனக்கு சுற்றுலா செல்லும் இடங்களில் எதுவும் வாங்கப் பிடிக்காது.ஆனால் புத்த இசைத் தொகுப்பும், திபெத் பற்றிய இயற்க்கை காட்சிகளடங்கிய வீடயோ தட்டையும், இதர சில இசைத் தட்டுக்களையும் வாங்கிக்கொண்டேன். ஆனால் நண்பன் வினோத் அவற்றை எடுத்துக்கொண்டு சென்றான். அவற்றில் சிலது வேலை செய்யவில்லை என்று சொல்லி இருந்தான்.

வாங்குவதை முடித்து, மலைமீதிருந்து காத்மண்டு நகரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். எங்கிருந்தோ டூர் கைடு(முழு சரக்கு வாசனை, பாக்கும் வாயில போட்டு கொழச்சிண்டே)காத்மாண்டுவின் ஜீரோ பாயின்ட்(வெள்ளை கலரில் உள்ள கூம்பு வடிவ கோபுரம்), நேபாள மகராஜாவின் அரண்மனை(சிறிது நாட்களில் அவரும் வீட்டிற்கு போகப் போகிறார், நேபாளில் மக்களாச்சி மலர்ந்துவிட்டது), சார்க் கட்டிடம்(SAARC Building) போன்ற பல முக்கிய கட்டிடங்களை சுட்டிக்காட்டினார். அனைத்தையும் பார்த்துவிட்டு ஒருவழியாக அனைவரும் கீழிறங்கி வந்தோம்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Friday, March 13, 2009

Flying to phokra valley - Nepal

போக்ராவை விட்டுப் புறப்படும் போது மறுபடியும் இங்கு வர வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். அதுபோலவே எவரஸ்ட்டை விட்டுப் புறப்படும் போதும் மறுபடியும் இங்கு வர வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

எவரஸ்ட்டிலிருந்து விமானம் போக்ராவிற்கு போகப்போவதாகவும் அங்குள்ள சில பயணிகளை சுமந்துகொண்டு மறுபடியும் காத்மண்டுவிற்கு போகப்போவதாகவும் பணிப் பெண் அறிவித்தாள். அதுபடியே விமானம் சுமார் 20 நிமிடங்கள் போக்ராவில் தரையிறங்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பறக்க தயாரானது.

உடன் வந்த பல பயணிகள் நேரடியாக காத்மாண்டுவிலிருந்து எவரஸ்ட் பயணத்தை மேற்கொண்டதால் போக்ராவிலுள்ள அன்னபூர்ணா சிகரத்தை ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பயணிகள் விமானத்திலிருந்து கீழிறங்கி விமான தளத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

சிறிது நேரத்தில் அனைவரையும் விமானத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். விமானம் காத்மண்டு நோக்கி புறப்படத் தயாரானது.

என்னுடைய இருக்கை கடைசி வரிசையில் இருந்தது. புதிதாக போக்ராவில் ஏறிய அமெரிக்கர் என் பக்கத்தில் அமர்ந்தார். அவருடைய மனைவி அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அமெரிக்கர் என்னிடம் "Where are you from?" என்று கேட்டார். சென்னை என்று பதில் சொன்னேன். திரு திருவென்று முழித்தார். பிறகு இந்தியா, டெல்லி, மும்பை என சென்னையின் பங்காளிகளை நினைவுபடுத்தி அதற்கு பக்கத்தில் என்று சொல்லி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகியது.

பிறகு எங்களுடைய எவரஸ்ட் பயணத்தை விளக்கி இதற்குத்தான் இங்கு வந்திருக்கிறோம் என்று சொன்னேன். மேலும் என்னுடைய ஜன்னலோர இருக்கையை அவருக்கு கொடுத்து வழியில் வந்த சிகரங்களை சுட்டிக் காட்டினேன். அவரும் ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அவருடைய மனைவியையும் சிகரத்தைப் பார்க்க அழைத்தார். இதற்கு மேல் அங்கு இருப்பது சரியில்லை என வினோத்தின் அம்மாவிற்கு பக்கத்தில் காலியாக இருந்த இருக்கைக்கு சென்றேன்.

சிறிது நேரத்தில் என்னை அழைத்த அவர் உங்களுடைய ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என என்னிடம் கூறினார். நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் நீங்களே உட்கார்ந்து கொள்ளுங்கள் என கூறினேன். என்னுடைய பதிலைக் கேட்டு அவரைவிட அவருடைய மனைவி மிகவும் சந்தோஷப் பட்டார்.

காத்மாண்டுவில் இறக்கி போகும் போது "Actually you helped me a lot to know beautiful things" என்று சொல்லி விட்டு சென்றார்.

இந்த பயணத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு சிறந்த விஷயம் என்னவெனில், விமானம் தளத்தைவிட்டுப் பறக்கும் போதும் சரி, தரையிறங்கும் போதும் சரி அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கைதட்டி விமானிக்கு மரியாதை செலுத்தினர். நமக்கு ஏன் இது போன்ற பழக்கம் வருவதில்லை என்று தெரியவில்லை!?.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Sunday, February 22, 2009

Mount Everest,Sagarmatha, Himalaya range

எங்களை சுமந்து கொண்டு பறந்த குட்டி விமானம் சிறிது நேரத்திற்கெல்லாம் சிகரங்கள் இருக்கும் பகுதியை அடைந்தது. விமானத்துல இருந்து காத்மண்டு நகரத்த பார்க்க அழகா இருந்தது. சின்னதும் பெரிசுமா 1300 சிகராங்களுக்கு மேல இங்க இருக்குன்னு சொன்னாங்க. அதுல ஒன்னு தான் உலகத்துலேயே உயரமான எவரஸ்ட் சிகரம். இந்த சிகரத்த சகர்மதான்னும் சொல்லுறாங்க. சில பேர் சாதனைக்காக நடந்தே சிகரத்தை அடையறாங்க.

எனக்கு சமீபத்துல Aerostress வந்ததுமே நான் கேட்ட முதல் கேள்வி "இங்க இருந்து கைலாய மலை தெரியுமா?"-ன்னு தான்.

"மன்னிக்கணும், நாம அந்த பக்கமா இப்ப போகல, எவரஸ்ட்டதான் பார்க்க போறோம்", அப்படின்னு சொல்லிட்டு போனாங்க. நான் கேட்ட கேள்வி கிறுக்கு தனமானதுதான் இருந்தாலும் அவல கூப்பிட்டு "ஏ பொண்ணு கைலாய மலை இருக்க பக்கத்தையாவது சொல்லிட்டு போ...ஒரு கும்பிடு போட்டுக்குவேன்ல! " அப்படின்னு சொல்லணும் போல இருந்தது.

பல சிகரங்களோட பெயர சொல்லி அதுதான் இதுதான்னு காமிச்சாங்க. எந்த பெயருமே மனசுல நிக்கல. கடைசியா ஓர் இடம் வந்தவுடன் இதுதான் எவரஸ்ட்டுன்னு சொன்னாங்க. உடன் வந்திருந்த வெளிநாட்டு பயணிகள் Seat belt -ஐ கழட்டிவிட்டு சந்தோஷத்துல துள்ளி குதிச்சாங்க. வந்திருந்த பயணிகளில் ஒரு பெண் என்னிடம் பிலிபைன்ஸ் மொழியில என்னமோ சொன்னாங்க. ஆரம்பத்துல எனக்கு எதுவுமே புரியல. போட்டா பெஔத்ய்புல் ஹா...(மறுபடியும் மறுபடியும் சொன்னதையே) இதுதான் காதுல விழுந்தது. Yeah its very beautiful -னு சொன்ன பிறகுதான் சந்தோஷமா போனாங்க.

எவரஸ்ட் கிட்ட வந்ததுமே ஒவ்வொரு பயணியையும் தனித்தனியா பைலட் ரூமிற்கு அழைத்துச் சென்று அங்க இருந்து பார்க்க அனுமதிச்சாங்க. அந்த இடத்துல எந்த பக்கம் பார்த்தாலும் பச்ச, மஞ்சா, செகப்பு -ன்னு பல நிரங்கள்ள பொத்தான்களா இருந்தது. தடுமாறியதால் என்னையும் அறியாமல் கை பொத்தான்களின் பக்கம் சென்றது. உடனே கையை தட்டி விட்டு என்னையும் பிடித்துக்கொண்டார்கள். கொஞ்ச நேரத்துல அங்க இருந்து போக சொல்லிட்டாங்க.

எங்களுடைய எவரஸ்ட் பயணத்தை Youtube -ல் கான இங்கு செல்லவும். http://www.youtube.com/watch?v=8ymlxCJyrfM

சிறிது நேரத்தில் அங்கிருந்து போக்ரா விமான நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை அழைத்துக் கொண்டு காத்மண்டு செல்லப் போவதாக அறிவிப்பு வந்தது.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Friday, January 30, 2009

Kathmandu Airport - mount everest

01-10-2008: காலை 6.30 மணிக்கெல்லாம் எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த Car தயாராக இருந்தது. நாங்கள் Water bollte மட்டும் எடுத்துக்கொண்டு சரியாக 7 மணிக்கு Kathmandu Airport -ல் இருந்தோம்.

Airport -ல் எங்களுக்காக காத்திருந்தவர் உள்ளே அழைத்துச் சென்றார். 30 நிமிடங்கள் காத்திருந்த பிறகு குட்டி விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எங்களுடன் பல நாட்டு பயணிகளும் இந்த எவரஸ்ட் பயணத்தில் இணைந்து கொண்டார்கள்.

Kathmandu Airport checking process சொல்லிக்கொள்ளும் அளவில் கராறாக இல்லை. சில வருடங்களுக்கு முன்பு காத்மாண்டுவில் நடந்த இந்திய விமானக் கடத்தல் ஞாபகம் வந்தது. சரியான பராமரிப்பு இல்லாததால் கலக்கமாகவே இருந்தது.

குறைவான நபர்கள் மட்டுமே சென்றிருந்ததால் அனைவருக்கும் Window Seat கொடுத்திருந்தார்கள். குட்டி விமானம் எங்களை சுமந்துகொண்டு எவரஸ்ட்டை நோக்கி பறக்க தயாரானது.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Saturday, January 10, 2009

Manakkamana to Kathmandu

30-09-2008: 5 மணி நேரம் பயணம் செய்து காத்மண்டுவை அடைந்தபோது இரவு 8 மணி.

நாங்கள் தங்கிய ஹோட்டலில் எவரஸ்ட் சிகரத்தை குட்டி விமானத்தில் சுற்றி பார்க்கும் வசதி செய்து கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, டூர் மேனேஜரை விசாரித்தோம்.

அவரும் எங்களுக்கு சில தகவல்களைக் கொடுத்தார். சிகரத்தை சுற்றி பார்க்க ஒரு நபருக்கு 5600 ரூபாய் என்றார்கள். எங்களுக்குள் கலந்து பேசி வினோத், அவனுடைய அம்மா, நான் மற்றும் எங்களுடன் பயணம் செய்த சிலரும் சேர்ந்து 7 பேர் தயாரானோம். ஏழுபேரில் ஒரு குழந்தையும் உடன் வந்தாள்.

காலை 6 மணிக்கெல்லாம் தயாராக இருக்குமாரு கேட்டுக்கொண்டதால், 1 மணி நேர பயணத்திற்கு வேண்டிய அனைத்தையும் தயார் செய்துவிட்டு இரவு உணவு எடுத்துக்கொண்டு உறங்கச்சென்றோம்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Hanging bridge in nepal

மனக்கமானா கோவிலுக்கு சென்று வேகமாக திரும்பி வந்துவிட்டதால் பக்கத்திலுள்ள தொங்கு பாலத்திற்கு சென்று வர நானும் வினோத்தும் ஆசைப்பட்டோம். எங்களுடன் நண்பர் தமிழும் உடன் வந்தார். முதலில் குறுக்கு வழியில் செல்ல நினைத்து ஒரு பாதையில் சென்றோம். போகும் வழியில் புதராக இருந்தது. ஒரு இடத்தில் பன்றிகளை பார்த்து பயந்துவிட்டோம். எதிரில் வந்தவர் இந்தவழியில் போக முடியாது என்று எச்சரித்தார். நாங்கள் அவரை மீறி சென்றோம். சுற்றி சுற்றி வந்து அவரின் எதிரிலேயே வந்து நின்றோம். அவர் எங்களை பார்த்து கேலியாக சிரித்தார். இது எல்லாம் எங்களுக்கு பழக்கம் சாமியோன்னு தமிழில் சொல்லிவிட்டு வேறு வழியாக செல்ல நினைத்து வெளியில் வந்தோம்.

இன்னொரு வழியில் செல்ல வேண்டுமெனில் 200 படிகள் இறங்கி ஏற வேண்டும். இதைக் கேட்ட நண்பர் தமிழ் பாதியிலேயே கழண்டுவிட்டார். இவ்வளவுதானா என்று இருவர் மட்டும் சென்றோம். முப்பது படிகள் கூட ஏறவில்லை எங்கள் இருவருக்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. முன் வைத்த காலை பின்வைப்பதில்லை என்ற முடிவுடன் முன்னோக்கி நடந்தோம். 15 நிமிடங்கள் படிகள் ஏறி தொங்கு பாலத்தை அடைந்தோம்.

பாலத்தை இரும்பினால் செய்திருந்ததால் பலமாக இருந்தது. நீண்ட நேரம் அங்கு இருந்துவிட்டு படிகளை ஏற பலமில்லாமல், ஒவ்வொரு படியாக தாங்கி தாங்கி ஏறி வந்தோம். அம்மன் கோவிலுக்கு சென்றிருந்த பயணிகள் திரும்பி வரவும், நாங்கள் அங்கு செல்லவும் சரியாக இருந்தது. இங்கிருந்து காத்மண்டு நோக்கி பயணமானோம்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Friday, January 9, 2009

Manakamana Temple (Cable Car Travel)

நாங்கள் கொண்டு வந்த மதிய சாப்பாட்டை சாப்பிடும்போது தஞ்சாவூர் மற்றும் மதுரையிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளுடன் பேச நேர்ந்தது. ஒரு நாள் முழுவதும் கடையடைப்பால் நாங்கள் முடங்கிக்கிடந்தோம். ஆனால் அவர்கள் அந்தநாளில் பயணம் செய்தார்களாம். வழியில் எந்த புரச்சியாளர்களும் தடங்கள் செய்யவில்லை என்று கூறினார்கள். இது தெரிந்திருந்தால் நாங்களும் லும்பினி சென்றிருப்போம்.

மனக்கமான மலைக்கோவிலுக்கு கேபிள் கார் மூலம் 20 நிமிடங்கள் பயணம் செய்து அம்மன் கோவிலை அடைந்தோம். கேபிள் காரில் போகும்போது காது அடைத்துக்கொள்கிறது. ரோப் காரில் சில இடங்களில் செங்குத்தாக செல்லும்போது மலையும் அதற்கு நடுவில் ஓடும் ஆறும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பண்டிகை காலம் என்பதாலும் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் மூலவரை சென்று தரிசிக்கவில்லை. மற்றபடி கோவிலை சுற்றியுள்ள பலியிடங்களை பார்க்க நேர்ந்தது. இங்கு ஆடு, கோழிகளை நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பலியிடுகிறார்கள். கோவிலை ஒட்டிய பல கடைகளிலும் பீர் கிடைக்கிறது. சிலர் குடும்பமாக வந்து சாப்பிடும் போது பீரையும் உடன் வாங்கி குடிக்கிறார்கள். குழந்தைகளுக்கும் குறைந்த அளவில் குடிக்க கொடுக்கிறார்கள். நாங்கள் வெறும் தேனிர் மட்டும் அருந்திவிட்டு திரும்பி வந்துவிட்டோம்.

You tube link: http://in.youtube.com/watch?v=byIft23G7FM&feature=related

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.