Tuesday, April 21, 2009

Nepal to India - Razcal journey

02-10-2008: வினோத்தின் அம்மாவும் நானும் எப்பொழுதுமே காலையில் சீக்கிரமாக தயாராகி விடுவோம். வினோத் கடைசி நிமிடத்தில் தான் தயாராவான். வினோத்தின் அத்தை சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து எங்காவது தெரிந்தவர்களின் அறைகளுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் வரும் போது குளித்து முடித்து தயாராக இருப்பார்கள்.

நான் சற்றே அறையை விட்டு வெளியில் வந்து என்னுடைய குழுவினர் எதிர்படுகிறார்களா என்று நோட்டம்விட்டேன். பள்ளிச் சிறுவர்களில் சிலர் தூக்கக் கலக்கத்துடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பெரிய வகுப்பு மாணவர்கள் சிறிய வகுப்பு மாணவர்களை தாதாக்களைப் போல் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்கள். ஒரு அறையின் முன்பு சில மாணவர்களும், ஆசிரியர்களும் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். எவ்வளவு தட்டியும் உள்ளிருந்து யாருமே கதவைத் திறக்கவில்லை. நீண்ட முயற்சிக்குப் பின்பு இரண்டாவது படிக்கும் நான்கு மாணவர்கள் கண்களைக் கசக்கிக் கொண்டு கதவைத் திறந்தார்கள்.

"இவங்கள யாருடீ தனியாவிட்டது" -ன்னு ஒரு ஆசிரியை சக ஊழியரிடம் குறை பட்டுக் கொண்டார்.

நான் அவர்களுக்கு புன்னகை செய்துவிட்டு அறைக்குத் திரும்பி உடைமைகளை தயார் செய்வதில் துரிதமானேன். சிறிது நேரத்தில் டூர் மேனேஜர் எல்லோருடைய அறை வாசல்களிலும் வந்து தயாராக இருக்கும் படி சொல்லிவிட்டுச்சென்றார்.

காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து இந்தியாவிலுள்ள ரஸ்கலுக்குப் புறப்பட தயாரானோம். எனக்கு காத்மண்டு சென்னையைப் போல் தான் தோன்றியது. வெயில் கூட சற்று அதிகம் என்றே சொல்லுவேன்.

எங்கள் விடுதியை விட்டு பத்து நிமிடப் பயணம் செய்திருந்தோம். சென்னையில் உள்ளது போல் வாகன நெரிசலை சந்திக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே மலையில் செல்லும் பயணம் வாகன வேகத்தை மட்டுப்படுத்தியிருந்தது. இதில் வாகன நெரிசல் வேறு எரிச்சல் படுத்தியது.

வண்டி மிகவும் குறைவான வேகத்தில் சென்றதால் நாங்கள் வண்டியை விட்டு கீழிறங்கி நடந்து சென்றோம். வண்டியில் உள்ள பெரியவர்கள் எங்களைக் கோபிக்கவே நாங்கள் மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம்.

ஒரு இடத்தில் வண்டிகள் நின்று நின்று சென்றுகொண்டிருந்தன. இரு சக்கர வாகனத்தில் சென்ற புதிதாக மணமுடித்த தம்பதிகள் லாரி மோதி இறந்திருந்தார்கள். அந்த விபத்து நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது. அதனால் தான் வழி நெடுகவும் வாகன நெரிசலை சந்திக்க நேர்ந்தது. ஐயோ... இது தெரியாமல் குறைபட்டுக் கொண்டோமே என்று வருத்தமாக இருந்தது.

அதற்கு மேல் வண்டி வேகம் எடுத்தது. மதியம் எதோ ஒரு ஊரில் நிறுத்தினார்கள். அங்கு காஞ்சி மடம் பஜனைக்கான மண்டபம் கட்டிக் கொடுத்திருந்தார்கள். திருவிழா சமயம் என்பதால் கூட்டம் வேறு நடந்துகொண்டிருந்தது. தண்ணீர் வசதியெல்லாம் கூட இருந்தது. சரி இங்கேயே போஜனம் முடித்துப் புறப்படலாம் என்றால் அவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

சாலைக்குப் பக்கத்திலிருந்த குட்டிச்சுவரில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கிளம்பினோம். சில மணிநேரம் பயணம் செய்து இந்திய எல்லையை அடைந்தோம். பார்க்குமிடமெல்லாம் ஏழ்மை தாண்டவமாடுகிறது. சாலையோரங்களில் பெயரளவிற்குக் கூட சுத்தம் இல்லை. இன்னும் கூட அவர்களின் வாழ்கைத் தரம் உயரவில்லை.

வழிநெடுக இது போன்ற காட்சிகளையே பார்த்துக் கொண்டு நாங்கள் தங்க வேண்டிய பயணியர் விடுதிக்கு இரவு 8 மணிக்குச் சென்றோம். பிறகு சமைத்து எங்களுக்கு இரவு சமையல் படைத்தார்கள். எங்கள் யாருக்குமே தங்கும் விடுதி பிடிக்கவில்லை.

நாங்கள் தங்கிய அறையில் ஒரு வெளிநாட்டவரும் தங்கியிருந்தார். அவர் எங்களுக்கு முன்பே அங்கு தங்கியிருந்தார். எங்களுடன் வந்த குட்டிக் குழந்தை காவ்யாவின் பாட்டி சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். வெளிநாட்டவருக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எங்களிடம் வந்து சத்தம் போடாமல் பேசுங்கள் நான் நாளை காலை சீக்கிரம் புறப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். தவறாக நினைத்த பாட்டி அவரை சண்டைக்கு இழுத்தார்கள். அவரும் ஏதேதோ திட்டினார். இருவருக்குமிடையே வாக்கு வாதம் முற்றியது.

வினோத்தின் அம்மா தலையிட்டு "வெளிநாட்டவர் நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்" என்று பாட்டியை சமாதானப்படுத்தினார். காலையில் புத்த காயாவிற்குப் புறப்பட வேண்டுமென்பதால் அனைவரும் உறங்கச்சென்றோம்.

Monday, April 6, 2009

Bye Bye to Kathmandu

அறைக்குத் திரும்பி கேமராவை எடுத்துக் கொண்டு மறுபடியும் வெளியில் நான் மட்டும் கிளம்பினேன். வினோத் தான் வரவில்லை என்று படுத்துக் கொண்டான்.

மறுபடியும் படித்துறைக்கு ஓடினேன். சரியாக நான் அங்கு செல்லவும் நிகழ்ச்சி முடியவும் சரியாக இருந்தது. வழியில் எதிர்பட்ட ஒருவனிடம் பேச்சுக் கொடுத்தேன். அவனது பெயர் ராகவன் என்று சொன்னான். இந்திய ஆணுக்கும், நேபாளி பெண்ணுக்கும் பிறந்தவன் என்று சொல்லிக்கொண்டான். MSC Physics final year படித்துக்கொண்டு இருந்ததாகச் சொன்னான். அவனுடைய தம்பியும் உடனிருந்தான். 12th படிக்கிறானாம்.

மேலும் என்னைப் பற்றி விசாரித்தான். நான் கடந்து வந்த பாதையையும், இனி செல்ல இருக்கும் இடங்களையும் பற்றி விவரித்தேன். பெயர் என்னவென்று கேட்டான். என் பெயர் கிருஷ்ண பிரபு, நண்பர்கள் கிச்சா என்று கூப்பிடுவார்கள் என்று சொன்னேன். What kitcha? You know one thing, the word Kitcha's meaning is dog in Nepali language.... என்று சொன்னான். ஆஹா! ஊரு விட்டு ஊரு வந்தது இதுக்குத்தானா? என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

மன்னராச்சி விலகி ஜனநாயக ஆட்சி வருவதைப் பற்றி வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தான். பனி பொழிந்தாலும், சுற்றி தகனம் நடந்ததால் சற்று குளிர் காய முடிந்தது.

எவ்வளவு நல்ல கலாச்சாரம். எங்களூரில் இதுபோல் கோவிலின் படித்துறையில் தகனம் செய்ய இயலாது என தென்னிந்திய கலாச்சாரத்தைப் பற்றி கூறினேன். எங்கிருந்து எங்கு வந்து இதையெல்லாம் ரசிக்கிறீர்கள்!. இங்கிருப்பவர்களுக்கு இதனுடைய மகிமை தெரிவதில்லை என குறை பட்டுக்கொண்டான்.

எங்களுடைய சம்பாஷனை முடிந்ததும் புறப்படத் தயாரானேன். திரும்பும் வழி இருட்டாக இருந்ததால் திசை தெரியாமல் முழித்தேன். என்னுடைய ஹோட்டலுக்கு எப்படி போக வேண்டுமென்று கேட்டேன். அந்த வழியில் தான் நாங்களும் போக வேண்டும் கூட வாருங்கள் என்று என்னையும் அழைத்துக் கொண்டான். விடுதி நெருங்கியதும் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

நீண்ட நேரம் அவர்களுடைய கலாச்சாரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தேன். எல்லா இடங்களிலும் மேற்கத்திய கலாச்சாரம் தான் சிறந்தது என்ற மாயை எப்படித்தான் நுழைந்ததோ தெரியவில்லை!... அப்படி நுழைந்த இடங்களில் காத்மாண்டுவும் ஒன்று. இந்தி நடிகர், நடிகைகளுக்கு நேபாளி மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல இடங்களில் இந்திப் பட பாடல்கள் ரம்யமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

விடுதிக்குத் திரும்பினால் சென்னை, மயிலாப்பூரிலுள்ள ஒரு பள்ளியிலிருந்து சுமார் 50 மாணவர்கள் எங்களுடைய விடுதியில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டு இருந்தார்கள். பள்ளிச் சுற்றுலாவிற்கு வந்துள்ளார்களாம். காத்மண்டில் இரவு தங்கி அங்கிருந்து போக்ரா, கேங்டாக் என சில இடங்களுக்கும் செல்ல இருப்பதாக கூறினார்கள். என்னுடைய எவரஸ்ட் பயண வீடியோவை அவர்களுக்கு காட்டினேன். மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

மறுநாள் காத்மண்டுவை விட்டு இந்தியாவிற்கு வர வேண்டும். எனவே வாங்கிய பொருட்கள் அனைத்தையும் பார்சல் செய்து பைகளில் வைத்தோம். அனைத்தையும் சரி பார்த்த பிறகு, இரவு உணவு முடித்துக் கொண்டு உறங்கச் சென்றோம்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Friday, April 3, 2009

Pashupatinath Temple - Kathmandu

கோவிலின் முகப்பிலே நூறுக்கும் குறையாத லிங்கங்கள் இருக்கின்றன. அதைச்சுற்றியும் செல்லலாம், தவிர்த்துவிட்டும் கோவிலுக்குள் செல்லலாம். அவையனைத்தையும் சுற்றுவதற்கு ஏற்றாற்போல் வழியும் சுற்றி சுற்றி வந்தது. ஒருவழியாக பாதை முடியும் இடத்தில் ஒரு ஆசாமி ருத்ராட்சத்துடன் நின்றுகொண்டிருந்தான். அதையெல்லாம் வாங்காதே என்று வினோதின் அம்மா ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்திருந்தார்கள். சரியென்று நானும் அவரைப் பார்த்தும் பார்க்காதது போல் சென்றுவிட்டேன். எங்கள் தலை மறையும் வரை ஏதேதோ சொல்லி எங்களை வாங்கச்சொல்லி கேட்டுக்கொண்டார். தப்பித்தால் போதுமென்று வேகமாக ஓடி மறைந்தோம்.

சிவனுக்கு கைலாயத்தைத் தவிர்த்து நான்கு முக்கியமான இடங்கள் இருக்கின்றன. அவை 1.தெற்கே இராமநாதர் (தமிழ்நாடு), 2.கிழக்கே விசுவநாதர் (உ.பி), 3.மேற்க்கே சோம்நாத் (குஜராத்) மற்றும் 4.வடக்கே பசுபதிநாத் (நேபாள்).

பசுபதிநாத் கோவில் அண்டை நாடான நேபாளின் தலை நகர் காத்மாண்டுவில் இருப்பதால் இது சிவா பூமியாகக் கருதப்படுகிறது. மலை மகள் இங்கு தவம் செய்ததாகவும், கங்கையே இங்கு பாய்ந்து இடத்தை வளப்படுத்துவதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

சிவசக்தி இங்கு வீற்றிருப்பதால் சிவராத்திரி இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியன்று இந்தியாவிலிருந்து கூட பக்தர்கள் சென்று தரிசிப்பதாக கேள்விப்பட்டேன்.சிவனுடைய வாகனமான நந்திக்கு இங்கு சிறப்பான பூஜை செய்வதாகவும், முக்கியத்துவம் தருவதாகவும் கேள்விப்பட்டேன்.

சரியாக கடைசி பூஜை நடக்கும் போது நாங்கள் சென்றோம். பத்து நிமிட பூஜை முடிந்தவுடன் கற்பகிரத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ என்று நினைத்துக்கொண்டேன். சிறிதளவு பிரசாதம் கொடுத்தார்கள் வாங்கி நெற்றியில் வைத்துக் கொண்டேன்.கோவிலுள் சின்னச்சின்ன விக்ரகங்கள் இருக்கின்றன. அனைத்தையும் பார்த்துவிட்டு பைரவரிடம் சென்றோம். ஆளுயர கால பைரவரின் உருவம் வழிபட இருந்தது. இதுவரை நான் பார்த்த பைரவரின் விக்ரகங்களில் இதுதான் பெரியது.

கோவிலுக்குல் புகைப்படன் எடுக்க அனுமதி இல்லாததால் எதையும் புகைப்படம் எடுக்க இயலவில்லை. கோவிலை ஒட்டிய பகுதியில் பாக்மதி ஆற்றினை பார்க்கும்படி மேடை ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. நாங்கள் சென்ற பொழுது கரையை ஒட்டிய படித்துறையில் சடலங்கள் தீயிளிடப்பட்டடு எரிந்து கொண்டிருந்தன. மணி 7.30 P.M இருக்கும் அதற்குள் கோவிலை முக்கால் வாசி மூடிவிட்டார்கள் 8 மணிக்குள்(P.M) முழுவதுமாக மூடி விடுவார்களாம்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய ஒரு விழ எடுத்திருந்தார்கள். அந்த விழாவில் பாடும் பஜனைப் பாடலுக்கு சன்யாசிகள் முதல் சம்சாரிகள் வரை கையில் தீபம் வைத்துக் கொண்டு ஆடினார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி, மகள், பேத்தி ஆகிய மூவரும் தாளக்கட்டிற்கு ஏற்றபடி ஆடியது அழகாக இருந்தது. பாக்மதி நதிக்கு ஆரத்தியும் எடுத்தார்கள். பார்ப்பதற்கு நாம் கங்கைக்கு செய்யும் ஆராதனையைப் போல் இருந்தது. அந்த ஆராதனையை அருகில் காண படித்துறைக்குச் சென்றோம்.

படித்துறைக்குச் சென்றதால் நாங்கள் காலணிகளை விட்ட இடம் மறந்து போனது. எந்தப் பக்கம் போவது என்றே தெரியவில்லை. வழியில் விசாரித்துக் கொண்டே போனோம். ஒரு கடையில் இருந்த நேபாளி, "நீங்கள் தமிழர்களா?" என்று கேட்டன். இவனுக்கு எப்படி தமிழ் தெரிந்தது என்று ஆச்சர்யமாக இருந்தது. விசாரித்ததில் எங்கள் ஊரின் பக்கத்திலுள்ள ஒரு கல்லூரியில் இரண்டு வருடம் ஹாஸ்டல் செக்யூரிட்டியாக வேலை செய்திருக்கிறான்.

ஒரு முக ருத்ராடம், பல முக ருத்ராட்சம் போன்றவற்றை ரூபாய் 200 -லிருந்து ரூபாய் 500-க்குள் வாங்கித் தருவதாகச் சொன்னான். அதுபடியே வினோதின் மாமாவிற்காக ரூபாய் 250-ற்கு ஒரு முக ருத்ராட்சம் ஒன்று வாங்கித் தந்தான். பிறகு கோவிலின் முகப்பில் நாங்கள் காலணிகளை விட்ட இடத்திற்கு வழி காட்டினான்.

நாங்கள் திரும்பிய நேரத்தில் அனைத்து கடைகளும் மூடி இருந்தது. "அய்யோ செருப்பு போச்சான்னு நெனச்சி ஒவ்வொரு கடையின் முன்பும் தேடினோம்". பிறகு வினோத் தான் எங்களுடைய செருப்பை கண்டு எடுத்து வந்தான்.