Wednesday, March 25, 2009

Swayambhunath Stupa - Kathmandu

காலையில் நாங்கள் எவரஸ்ட் பயணம் சென்றிருந்ததால், உடன் வந்திருந்தவர்கள் பசுபதிநாத் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வந்திருந்தார்கள். அவர்கள் "ஸ்வயம்புநாத்" கோவிலுக்கு செல்ல தயாராக இருத்தனர். நாங்களும் அவர்களுடன் இணைந்துகொண்டோம்.

5 -ஆம் நூற்றாண்டிலிருந்தே புகழ்பெற்ற புத்த ஸ்தலமாக விளங்கும் "ஸ்வயம்புநாத்" கோவில் ஊரைவிட்டு சற்று வெளியே பயணம் செய்து அடையும் தொலைவில் உள்ளது. கோவிலானது ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழி கூட சற்று குறுகலாகவே உள்ளது. சில பல படிகள் மேலே ஏறிப் போய்த்தான் தரிசனம் செய்ய வேண்டும். செல்லும் வழியில் நிறைய குரங்குகள் அங்குமிங்கும் அலைந்துகொண்டு இருக்கின்றன. சிலர் அவற்றிற்கு சாப்பிட ஏதாவது தருகிறார்கள். சில இடங்களில் படியானது செங்குத்தாக இருந்தால் உடன் வந்த சிலருக்கு மலை ஏறச் சிரமமாகத்தான் இருந்தது. இங்குள்ள பாதை முழுவதும் ஆங்காங்கு ருத்திராட்சம், ஸ்படிகம், புத்த சிலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன.

மேலே சென்றால், நான்கு திசைகளிலும் புத்தரின் முகம் தெரியுமாறு வடிவமைத்திருந்தார்கள். கோவிலில் சின்னச் சின்னச் சன்னதிகள் இருந்தன. அவற்றில் சில புத்தர் சிலைகளும், சில அம்மன் சிலைகளும் காட்டியளித்தன. பிறகு வெளியே வந்தால் கையால் உருட்டி விடும் பித்தளை வடிவ அமைப்பு வரிசையாக சுவற்றைச் சுற்றி பொருத்தி வைத்திருந்தனர். ஒருகால் இதுதான் புத்தரின் தர்மச்சக்கரமோ என்று கூட தோன்றியது. உருட்டாமல் போனால் தெய்வக்குத்தம் ஆகிவிடப்போகிறது என்று நாங்களும் அதை ஒவ்வொன்றாக உருட்டி விட்டு வந்தோம்.

ஏகப்பட்ட புத்தர் சிலைகளும், புத்த பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்களும் இங்கு விலைக்கு வாங்க கிடைக்கின்றன. பொதுவாக எனக்கு சுற்றுலா செல்லும் இடங்களில் எதுவும் வாங்கப் பிடிக்காது.ஆனால் புத்த இசைத் தொகுப்பும், திபெத் பற்றிய இயற்க்கை காட்சிகளடங்கிய வீடயோ தட்டையும், இதர சில இசைத் தட்டுக்களையும் வாங்கிக்கொண்டேன். ஆனால் நண்பன் வினோத் அவற்றை எடுத்துக்கொண்டு சென்றான். அவற்றில் சிலது வேலை செய்யவில்லை என்று சொல்லி இருந்தான்.

வாங்குவதை முடித்து, மலைமீதிருந்து காத்மண்டு நகரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். எங்கிருந்தோ டூர் கைடு(முழு சரக்கு வாசனை, பாக்கும் வாயில போட்டு கொழச்சிண்டே)காத்மாண்டுவின் ஜீரோ பாயின்ட்(வெள்ளை கலரில் உள்ள கூம்பு வடிவ கோபுரம்), நேபாள மகராஜாவின் அரண்மனை(சிறிது நாட்களில் அவரும் வீட்டிற்கு போகப் போகிறார், நேபாளில் மக்களாச்சி மலர்ந்துவிட்டது), சார்க் கட்டிடம்(SAARC Building) போன்ற பல முக்கிய கட்டிடங்களை சுட்டிக்காட்டினார். அனைத்தையும் பார்த்துவிட்டு ஒருவழியாக அனைவரும் கீழிறங்கி வந்தோம்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

No comments: