Monday, March 30, 2009

Way to Pashupatinath Temple - Kathmandu

விடிய காலையிலேயே எழுந்து கொண்டதால், புத்த நிலகந்தாவிலிருந்து அறைக்குத் திரும்பி ஒய்வு எடுத்துக் கொண்டோம். சாப்பிட்டுவிட்டு மூன்று இடங்களுக்கு செல்லும் வாய்ப்பினை டூர் கைடு எங்களுக்கு வழங்கினார்.

1)காத்மண்டு பசாருக்கு செல்வோர் அங்கு செல்லலாம்,
2) மீண்டும் பசுபதியை தரிசிக்கலாம் அல்லது
3)காத்மாண்டுவிலிருந்து சற்று விலகி இருக்கும் அரண்மனை ஒன்றிற்கு செல்லலாம்.

நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தார். வந்திருந்ததில் ஆறு பேர் அரண்மனையைப் பார்க்க சென்றனர். மூன்று பேர் பசுபதிநாத் தரிசனத்திற்கு சென்றிருந்தோம். பலரும் தேர்ந்தெடுத்தது பஜாருக்கு செல்வதைத்தான். ஏனெனில் பலரும் பசுபதியை காலையிலேயே தரிசித்துவிட்டனர். அரண்மனை யாரையும் கவரவில்லை.

நாங்கள் எவரஸ்ட் பயணம் சென்றிருந்ததால் காலையில் பசுபதியை தரிசிக்க இயலவில்லை. நாளை காலை சீக்கிரம் காத்மண்டுவை விட்டு கிளம்பும் படி இருந்ததால், இப்பொழுது பார்த்தால் தான் உண்டு. நாளை பார்பது என்பது இயலாத காரியம்.

கையில் இருந்த பைசாவிற்கு, அக்கா மகன் அகில், சார்லஸ் மற்றும் சிலருக்கு ருத்ராட்சம் வாங்கிக்கொண்டேன். ஒரு வழியாக வாங்க வேண்டியதை வாங்கி முடித்து பசுபதிநாத் கோவிலுக்கு செல்ல ஆயத்தமானோம். நாங்கள் கிளம்பியபோது சரியாக மாலை 6 மணி.

செல்லும் வழியில் மாலை குளிருக்கு, சிகரட் புகையை உள்ளே இழுத்து அலையலையாக வெளியேவிட்டு அழகு பார்க்கும் பதின்பருவத்திலிருந்த ஒருவன் யாருக்காகவோ காத்திருப்பது போல் தென்பட்டான். வழியில் செல்லும் பெண்களுக்கு விசில் அடித்து சம்பாஷனை செய்தபடியே இருந்தான். நாங்கள் தூரத்தில் செல்லும் வரை அந்தச் சப்தம் விட்டுவிட்டு கேட்டுக் கொண்டே இருந்தது.

சப்தம் அடங்கிய தொலைவில் எதிரே தீச்சுவாலை கண்ணில் பட்டது. அருகில் சென்று பார்த்தபோது தான் புரிந்தது அது தகன இடம் என்று. நேபாளில் தகனத்தை கோவிலின் அருகிலுள்ள படியிலேயே செய்கிறார்கள். "எண்டா உங்களுக்கு வேற வழியே தெரியலையா?" -என்று வினோத் அம்மாவிடம் சரியான திட்டு வாங்கினோம். இருள் தான் என்றாலும் ஒரு புகைப்படம் எடுத்தேன். "இத கூடவாடா போட்டோ எடுப்பிங்க? என்ன பசங்கலோன்னு" இன்னொரு திட்டு.

வசை வாங்கிக்கொண்டே கோவிலின் முகப்பை அடைந்தோம். செருப்பை கழட்டி விட இடம் இல்லாததால் ஒரு பூக்கடையில் விட்டு விட்டு சென்றோம். மொழிதெரியாத எங்களுக்கு இது போன்றதொரு சலுகையை பேசிப்பெற்றது ஆச்சர்யமே.

No comments: