Thursday, March 26, 2009

Bodnath Stupa - kathmandu

ஸ்வயம்புநாத் மலைக் கோவிலிலிருந்து "போத்நாத் ஸ்தூபிக்கு" புறப்பட்டோம். செல்லும் வழியில் ஆளுயர தங்க நிற தியான புத்தசிலையைப் பார்த்தோம்.

தியான மண்டபம் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்தூபியாகும். இது திபெத்திய மற்றும் நேபாளிய புத்த மத நம்பிக்கையுடையவர்களுக்கு முக்கியமான புனிதத் தளமாக கருதப்படுகிறது. சம்பா சம்புத்தனை இங்கு பஞ்சபூதமாக கருதி இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இங்கு நாங்கள் சிறிது நேரமே இருந்ததால் கட்டிட அமைப்பு பற்றிய பூரண தகவல்களைப் பெற இயலவில்லை.

செல்லும் வழியெல்லாம் மஞ்சள், கருஞ்சிவப்பு, காவி மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்த பிக்குகள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். சில பிக்குகள் ஆங்காங்கு தியானித்துக்கொண்டு இருந்தனர். நம்போன்ற சுற்றுலா பயணிகள் விரும்பி புகைப்படம் எடுக்க அழைத்தால் புன்னகையுடன் வருகிறனர். புகைப்படம் எடுத்தவுடன் புன்னகையை உதிர்த்துவிட்டு சென்றுவிடுகின்றனர். போத்நாத் ஸ்தூபியை சுற்றிலும் பல கடைகள் இருக்கின்றன. எங்களிடம் நேபாள பணம் இல்லாததால் எதுவும் வாங்க இயலவில்லை.

ஒரு பெண் வழியில் உட்கார்ந்துகொண்டு அயல் நாட்டு பணத்திற்கு நேபாள நாணயம் கொடுத்துக்கொண்டு இருந்தால். INR 100 -க்கு நேபாள பணம் 140 தருவதாக சொல்லிக் கொண்டு இருந்தாள். உண்மையில் INR 100 -கான மதிப்பு நே.ப 160 ஆகும். நம்நாட்டில் இது போல பணத்தை மாற்றினால் கம்பி என்ன வேண்டியதுதான். அதுமட்டுமின்றி இதுபோன்ற தடையிலா நாணய மாற்றம் நாட்டின் பொருளாதாரத்திக்கே உலை வைக்கக்கூடியது என குரு மூர்த்தியின் கட்டுரையை படித்த ஞாபகம் வந்தது.

வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நானும் வினோத்தும் வழிதவறிவிட்டோம். எந்த பக்கம் போனாலும் வந்த வழி அடையாளமே தெரியவில்லை. எங்களைப் போலவே வழியை தவறவிட்ட, எங்களுடன் வந்த சக பயணிகளையும் எதிரில் பார்க்க நேர்ந்தது. அவர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஒரு வழியாக எங்களுடைய குழுவினரை கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். அவர்கள் கரகரவென பல்லைக்கடித்ததை சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

No comments: