Friday, March 13, 2009

Flying to phokra valley - Nepal

போக்ராவை விட்டுப் புறப்படும் போது மறுபடியும் இங்கு வர வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். அதுபோலவே எவரஸ்ட்டை விட்டுப் புறப்படும் போதும் மறுபடியும் இங்கு வர வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

எவரஸ்ட்டிலிருந்து விமானம் போக்ராவிற்கு போகப்போவதாகவும் அங்குள்ள சில பயணிகளை சுமந்துகொண்டு மறுபடியும் காத்மண்டுவிற்கு போகப்போவதாகவும் பணிப் பெண் அறிவித்தாள். அதுபடியே விமானம் சுமார் 20 நிமிடங்கள் போக்ராவில் தரையிறங்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பறக்க தயாரானது.

உடன் வந்த பல பயணிகள் நேரடியாக காத்மாண்டுவிலிருந்து எவரஸ்ட் பயணத்தை மேற்கொண்டதால் போக்ராவிலுள்ள அன்னபூர்ணா சிகரத்தை ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பயணிகள் விமானத்திலிருந்து கீழிறங்கி விமான தளத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

சிறிது நேரத்தில் அனைவரையும் விமானத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். விமானம் காத்மண்டு நோக்கி புறப்படத் தயாரானது.

என்னுடைய இருக்கை கடைசி வரிசையில் இருந்தது. புதிதாக போக்ராவில் ஏறிய அமெரிக்கர் என் பக்கத்தில் அமர்ந்தார். அவருடைய மனைவி அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அமெரிக்கர் என்னிடம் "Where are you from?" என்று கேட்டார். சென்னை என்று பதில் சொன்னேன். திரு திருவென்று முழித்தார். பிறகு இந்தியா, டெல்லி, மும்பை என சென்னையின் பங்காளிகளை நினைவுபடுத்தி அதற்கு பக்கத்தில் என்று சொல்லி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகியது.

பிறகு எங்களுடைய எவரஸ்ட் பயணத்தை விளக்கி இதற்குத்தான் இங்கு வந்திருக்கிறோம் என்று சொன்னேன். மேலும் என்னுடைய ஜன்னலோர இருக்கையை அவருக்கு கொடுத்து வழியில் வந்த சிகரங்களை சுட்டிக் காட்டினேன். அவரும் ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அவருடைய மனைவியையும் சிகரத்தைப் பார்க்க அழைத்தார். இதற்கு மேல் அங்கு இருப்பது சரியில்லை என வினோத்தின் அம்மாவிற்கு பக்கத்தில் காலியாக இருந்த இருக்கைக்கு சென்றேன்.

சிறிது நேரத்தில் என்னை அழைத்த அவர் உங்களுடைய ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என என்னிடம் கூறினார். நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் நீங்களே உட்கார்ந்து கொள்ளுங்கள் என கூறினேன். என்னுடைய பதிலைக் கேட்டு அவரைவிட அவருடைய மனைவி மிகவும் சந்தோஷப் பட்டார்.

காத்மாண்டுவில் இறக்கி போகும் போது "Actually you helped me a lot to know beautiful things" என்று சொல்லி விட்டு சென்றார்.

இந்த பயணத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு சிறந்த விஷயம் என்னவெனில், விமானம் தளத்தைவிட்டுப் பறக்கும் போதும் சரி, தரையிறங்கும் போதும் சரி அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கைதட்டி விமானிக்கு மரியாதை செலுத்தினர். நமக்கு ஏன் இது போன்ற பழக்கம் வருவதில்லை என்று தெரியவில்லை!?.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

No comments: