Wednesday, October 22, 2008

Buildings in Ayodhya, Ramajanma bhoomi, Ram boomi

அயோத்தியில் காணப்படும் கட்டிடங்களில் பழமையானது எது, மிகவும் பழமையானது எது என்று பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகிறது. ஏனெனில் தசரத மகாராஜா துவங்கி, இஸ்லாம் மன்னர்கள் வரை பலர் ஆண்டுள்ளனர். ஆகவே இது இந்து, முஸ்லிம் மற்றும் ஜைன மன்னர்களின் கீழ் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் அவரவர் தமது இயல்புக்கு ஏற்ப கட்டிட அமைப்பை மாற்றியது போல் தெரிகிறது.

தசரத மகாராஜா தங்கிய இடம், சீதா கல்யாணத்தின் போது ஜனக மகாராஜா தங்கிய இடம், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்த இடம், ராமர் துறவரம் மேற்கொண்ட இடம் என்று பல இடங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதில் சிறப்பு என்னவெனில் ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடம் ராமஜென்ம பூமி. இங்கு முஸ்லிம் மன்னர்கள் காலத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. ஆக ராமவிரும்பிகள் மசூதியை இடித்துவிட்டு ராமருக்காக கோவில்கட்ட ஆரம்பித்தார்கள். இது ராமர் கோவில், மசூதி என்பதையும் தாண்டி, இந்து முஸ்லீம் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்த இடத்தில் பூஜை நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இருந்தாலும் பார்வையாளர்கள் பார்க்க மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். 8 அடிக்கு 8 அடி உள்ள இந்த இடத்தில் ராமரின் சிறிய படம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைக்கான பல வித சோதனைகளுக்கு உட்பட வேண்டும். சுமார் 1 கிமீ நடந்து செல்லவேண்டியுள்ளது.புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. மேலும் இரும்பு, தோல் மற்றும் வேதி பொருட்கள் எடுத்து செல்ல அனுமதியில்லை. இந்த இடத்தில் ராமருக்காக கோவில் கட்டியே தீருவேன் என்று 8 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

இவர் எப்படி ஒன்றுமே சாப்பிடாமல் இப்படி புஷ்டியாக இருக்கிறார். சர்மிளா டாகூர் கூட பல வருடங்களாக நீராகாரம் மட்டுமே சாப்பிடுகிறார் என்று தெரியும்.ஆனால் எலும்பும் தோலுமாக இருக்கிறார். இவர்கள் மட்டும் எப்படி?

சரி என்று பார்த்தால், கோவில் கட்டுவதற்காக பணம் வசூல் செய்தார்கள். 1000 ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு வருடமும் ராம நவமியில் பூஜை செய்து வீட்டிற்கு பிரசாதம் தருவதாக சொன்னது தான் தாமதாம் என் குழுவிலிருந்து 10 பேர் உடனே செலுத்தினார்கள். மேலும் 50,100,500 என அவரவர் சக்திக்கு ஏற்ப தனது பங்களிப்பை செய்தார்கள். ஆனால் ரூபாய் 1000 செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் பிரசாதம் வீடு தேடி வரும்.

இவர் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு சமையலறை இருக்கிறது. இது சீதை சமையல் செய்த இடம் என்று செல்கிறார்கள். மக்கள் திரளாக சென்று பக்தியுடன் பார்க்கிறார்கள். ராமர், பாபர் மசூதி இவற்றை தவிர ஜைனர்களுக்கான முக்கிய இடமாகவும் இது கருதப்படுகிறது.

கண்களை மூடி ராமரை அழைத்தாலும், ஹேராம் படத்தில் காந்தி இறக்கும்போது கூறிய "ஹே...ராம்.. " என முனகலாகத்தான் வருகிறது. ஆக ஆன்மீகம் போதிக்கும் அமைதியை மீறிய கலவர பூமியாக அயோத்தி இருக்கிறது.

பயணிப்போம்,
கிருஷ்ணப்பிரபு,
சென்னை.

No comments: