Monday, October 20, 2008

Allahabad triveni sangamam, Prayag,kumbh mela

26- ம் தேதி காலை 7 -மணிக்கு புறப்பட்டு திருவேணி சங்கமத்தை அடைந்தோம். டூர் கைடு யாரும் எங்களுக்கு இல்லாததால் சிறிது சிரமம் இருந்தது. அலகாபாத்திற்கு ப்ரயாகம்( இரு ஆறுகள் சேரும் இடம்) என்ற பெயரும் உண்டு. இதிகாச காலத்தில் பரத்வாஜ முனி இங்கு குடில் அமைத்து பல சீடர்களுக்கு குருகுல கல்வி போதித்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்பொழுது இராமபிரான் இங்கு வந்ததாகவும், அவரிடம் ஆசி வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

நாங்கள் சென்ற பொழுது ஆற்றின் வேகம் சீராக இருந்ததால் ஆற்றின் மையத்திற்கு படகு மூலமாக சென்று பூஜை செய்ய டூர் மேனேஜர் ஏற்பாடு செய்தார். ஒரு நபருக்கு 40 -ரூபாய் என்னிடம் தரவேண்டும் என்றார். அதற்கு எல்லோரும் சம்மதித்தன்ர்.

பூஜை செய்ய வந்த பிராமணர் எங்களது படகில் வந்ததால் "பாருங்கோம்மா இது தான் கங்காம்மா, அதோ அது தான் யமுனா நதி. இந்த இரண்டு நதிதாம்மா இங்க சேர்ரது". சரஸ்வதிய மனசுல கூப்பிட்டுக்கோங்க. சரஸ்வதி இங்க கண்களுக்கு தெரியாம மற்ற ரெண்டு நதியோட கலந்துட்ரது" என்றார்.

தசரத மகாராஜாவிற்கு தர்பனம் கொடுப்பதற்காக சீதா தேவி ராம, லட்சுமணர்களுக்காக ப்ரயாகத்தில் அமர்திருந்தாள். ஆனால் தசரத மகாராஜா தனக்கு அதிக பசியாக இருப்பதாகவும், ஆகவே கொடுக்கவேண்டிய பட்சணங்களை சீக்கிரமாக கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டாராம். சீதை ராம, லட்சுமணர்களுக்காக காத்திருப்பதாகவும், சிறிது நேரம் பொருத்துக்கொள்ளுமாரும் கேட்டுக்கொண்டாளாம். ஆனால் அவருடைய கோரிக்கையை அரசர் ஏற்றுக்கொள்ளாததால், அரசருக்காக கொண்டுவந்த பட்சனங்களை ஆகம விதிப்படி அளித்தாளாம். மகாராஜாவும் மகிழ்சியுடன் சென்றுவிட்டாராம்.

தாமதமாக வந்த ராம லட்சுமரிடம் நடந்த விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறாள். இதை நம்பாத அவர்கள் அதற்கான சாட்சியங்களை கேட்டார்கலாம். அதற்கு அவள் சரஸ்வதி, பசு உட்பட ஐந்து சாட்சியங்களை அழைத்ததாகவும், அதற்கு சரஸ்வதி சாட்சி கூற வரவில்லையாதலால் "இன்றிலிருந்து இந்த இடத்தில் நீ யார் கண்களுக்கும் தெரியாமல் காணாமல் போவாய்" என்று சபித்ததாகவும் கூறப்படுகிறது. அன்றிலிருந்து கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இந்த இடத்தில் சரஸ்வதி கண்களுக்கு தெரியாமல் இரு நதிகளுக்கு அடியில் ஓடுவதாகவும் நம்பப்படுகிறது (சிலர் ஆகாயமார்கமாக சரஸ்வதி இந்த இடத்தில் வந்து கலப்பதாகவும் சொல்லுகிறார்கள்). ஆக கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இங்கு கலப்பதால் இது திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.

சீதையே இங்கு வந்து முன்னோர்களுக்கான மரியாதையை செய்ததால், நாமும் அதை இங்கு செய்தால் நல்லது என்று இந்துக்களால் நம்பப்படுகிறது. மேலும் சுமங்களி பூஜையும் இங்கு செய்யப்படுகிறது. அர்சகர்களுக்கு தகுந்தார் போல் அதற்கான தட்சணையும் மாறுபடுகிறது. முன்னோர்களுக்கான புண்ணியம் என்று சொல்லி பல நூறு ரூபாக்களை ஏமாற்றுகிறார்கள். ஆகவே சரியான புரோகிதர் மூலம் செய்வது நல்லது.

திரிவேணி(ப்ரயாக்),ஹரித்வார்,உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் கும்ப் மேளா இந்திய அளவில் நடக்கும் முக்கியமான விழாவாகும். ஆக இந்த விழா 12 வருடங்களுக்கு ஒரு முறை அலகாபாத்தில் நடக்கிறது. திருவிழா சமயத்தில் அலகாபாத்தை சுற்றி 5 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் ஓட அனுமதி கிடையாதாம். அந்த நேரத்தில் 5 லிருந்து 10 லட்சம் பக்தர்கள் இங்கு கூடுவதாக சொல்கிறார்கள்.

புனித நதியாகக் கொண்டாடப்படும் இந்த இடத்தில் ஆற்றிலும் சரி, அதன் கரையிலும் சரி மாசுப்படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும். மனித மற்றும் கால்நடை கழிவுகளை அதில் கலக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். என்னதான் இதிகாசங்கள் இதன் புனிதங்களை எடுத்துக்கூறினாலும், அசுத்தமானது ஆன்மீகத்தையும் மீறி வேறுமாதிரி யோசிக்கவைக்கிறது. அடுத்த தலைமுறை கங்கை குளியலை வேடிக்கையாக பேச இது வழிவகுக்கிறது.

சுமார் ஒரு மணிநேர சங்கமக் குளியலுக்குப் பிறகு அதே படகு மூலமாக கரைக்கு வரும்பொழுது, சுற்றூலா தோழர் செந்தில் படகோட்டியிடம் ஒரு ஆளுக்கு எவ்வளவு என்று கேட்க, 25 ரூபாய் என்று அவன் சொல்ல டூர் மேனேஜரின் சுயரூபம் தெரியவந்தது.

இதிலிருந்து டூர் மேனேஜருக்கும் சுற்றுலா குழுவினற்கும் இடையில் ஒரு பனிப்போர் உருவானது. அந்த இடைவெளி சுற்றுலா முழுவதும், சாப்பாடு முதல் இடங்களை பார்வையிட அழைத்து செல்லுதல் வரை எதிரொலித்தது. அதனால் சரித்திர பெருமைவாய்ந்த பல இடங்களை வெரும் இடங்களாக மட்டுமே பார்கவேண்டியிருந்தது. இங்கு அலகாபாத்தை ஒட்டியுள்ள அக்பர் கோட்டை மற்றும் அநுமன் கோவிப்பற்றி அடுத்த பதிவில் பார்கலம். நன்றி

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு.
சென்னை.

No comments: